முக்கிய திட்டங்கள் குஜராத்திற்கு மாற்றப்பட்டதால் மராட்டியத்தில் வேலையில்லா திண்டாட்டம் - பிரியங்கா காந்தி


முக்கிய திட்டங்கள் குஜராத்திற்கு மாற்றப்பட்டதால் மராட்டியத்தில் வேலையில்லா திண்டாட்டம் - பிரியங்கா காந்தி
x

கோப்புப்படம்

பெண்கள் சிறந்த வாழ்க்கைக்காக வாக்களிக்க வேண்டும், மாதம் ரூ.1,500 கிடைக்கிறது என்பதற்காக வாக்களிக்கக் கூடாது என்று பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

மும்பை,

288 தொகுதிகளை கொண்ட மராட்டிய சட்டசபைக்கு வருகிற 20-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் பா.ஜனதா, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் ஆகிய ஆளும் கட்சிகள் அடங்கிய மகாயுதி கூட்டணியும், காங்கிரஸ், உத்தவ் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் (எஸ்.பி.) ஆகிய எதிர்க்கட்சிகள் அடங்கிய மகா விகாஸ் அகாடி கூட்டணியும் நேருக்கு நேர் மோதுகின்றன.

நாடாளுமன்ற தேர்தலில் மராட்டியத்தில் பா.ஜனதா கூட்டணிக்கு எதிர்பாராத பின்னடைவு ஏற்பட்டதால், சட்டசபை தேர்தலில் எப்பாடு பட்டாவது ஆட்சியை தக்க வைக்கும் முனைப்பில் பா.ஜனதா கூட்டணியும், அந்த கூட்டணியிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றும் முயற்சியில் எதிர்க்கட்சி கூட்டணியும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

குறிப்பாக பிரதமர் மோடி கடந்த 8-ந் தேதி பிரசாரத்தை தொடங்கினார். அவர் 4 நாட்களாக 9 பொதுக்கூட்டங்களில் பங்கேற்று சூறாவளி பிரசாரம் செய்தார். அப்போது அவர் காங்கிரஸ் கட்சியையும், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தியையும் கடுமையாக தாக்கி பேசினார். அவர் கடந்த 14-ந் தேதி தனது பிரசாரத்தை மும்பையில் நிறைவு செய்தார். மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவும் பல்வேறு பிரசார கூட்டங்களில் பங்கேற்று வாக்கு வேட்டையாடினார்.

இதேபோல காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல்காந்தி ஆகியோரும் பல்வேறு கூட்டங்களில் பங்கேற்று பிரசாரம் செய்து வருகிறார்கள். தேர்தல் பிரசாரம் நாளை (திங்கட்கிழமை) மாலையுடன் ஓய்கிறது. பிரசாரத்துக்கு 1 நாள் மட்டுமே அவகாசம் உள்ளதால் தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் இறுதிகட்ட பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் மராட்டிய மாநிலம் கட்சிரோலி மாவட்டத்தில் மகா விகாஸ் அகாடி கூட்டணிக்கு ஆதரவாக காங்கிரஸ் பொதுச் செயலாளார் பிரியங்கா காந்தி பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது பேசிய அவர், "ஆளும் கட்சியினர் உண்மையான பிரச்னையிலிருந்து மக்களை திசைதிருப்பும் பணிகளைச் செய்கின்றனர். இளைஞர்கள் திறன்களை வளர்த்துக்கொள்கின்றனர். அதற்காக உழைக்கின்றனர். ஆனால், அவர்களுக்கு இன்னும் வேலை கிடைக்கவில்லை. இதில் அரசு கவனம் செலுத்தவில்லை. காலியாக உள்ள இடங்களை நிரப்ப மாநில அரசு தவறிவிட்டது.

மராட்டியத்தின் பல திட்டங்கள் குஜராத்துக்கு மாற்றப்பட்டதால் மகாராஷ்டிரத்தில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துள்ளது. நாட்டில் இளைஞர்கள் தற்கொலை செய்துகொள்வது மராட்டிய மாநிலத்தில்தான் அதிக எண்ணிக்கையில் உள்ளது. வேலையில்லா திண்டாட்டத்திற்கு தீர்வு காண பா.ஜ.க. தவறிவிட்டது. இதற்கான விளைவுதான் இளைஞர்களின் தற்கொலை.

பெண்கள் தங்களுக்கு கிடைக்கும் சிறந்த வாழ்க்கைக்காக வாக்களிக்க வேண்டுமே தவிர மாதம் ரூ.1,500 கிடைக்கிறது என்பதற்காக வாக்களிக்கக் கூடாது. நாம் ஒன்றாக இருந்தால், பாதுகாப்புடன் இருப்போம் என பாஜக தலைவர்கள் பிரசாரம் செய்கின்றனர். ஆனால், இந்த நாட்டில் உண்மையில் பாதுகாப்புடன் இருப்பது அதானிதான். பிரச்னைகளில் சாமானிய மக்கள் திண்டாடிக்கொண்டிருக்கும்போது, மக்களுக்கான அரசின் கஜானாவை இயக்கிக்கொண்டிருப்பது அதானிதான் என்பதை நாடறியும்.

விமான நிலையம், துறைமுகம் என நாட்டின் பெரும்பாலான சொத்துகள் அதானி குழுமத்தின் வசம் உள்ளது. தேசிய சொத்துகளை தனிநபருக்கு ஒதுக்குவதை விடுத்து, நாட்டில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் பா.ஜ.க. அரசு கவனம் செலுத்த வேண்டும்.

காங்கிரஸ் ஆட்சியில் நமது தலைவர்கள் மக்களுக்கு பொறுப்புக்கூற வேண்டியவர்களாக இருந்தனர். ஆனால், பா.ஜ.க. ஆட்சியில் இந்தப் பொறுப்பு இல்லாமல் போய்விட்டது. அமைச்சர்களும், முதல்-மந்திரிகளும் ஏன்? பிரதமர் கூட மக்களிடம் பதில் சொல்ல முடியாதவர்களாக மாறிவிட்டனர்.

அவர்களின் நடத்தை மாறிவிட்டது. அவர்கள் உண்மையான பிரச்சினைகளில் இருந்து கவனத்தை திசை திருப்பி சமூகத்தை மாற்றுவதில் கவனம் செலுத்துகிறார்கள். அதானிக்கு எவ்வளவு பழங்குடியினர் நிலம் கொடுக்கப்பட்டுள்ளது என்று சத்தீஸ்கர் மக்களிடம் கேளுங்கள். கடந்த பத்து ஆண்டுகளில் அரசியலின் திசை மாறிவிட்டது. அதை மீண்டும் மக்களிடம் கொண்டு சேர்ப்போம்" என்று அவர் கூறினார்.


Next Story