மராட்டிய தேர்தல்: தமிழகத்தை சேர்ந்த கேப்டன் தமிழ்செல்வன் முன்னிலை
சியோன் கோலிவாடா தொகுதியில் தமிழகத்தை சேர்ந்த கேப்டன் தமிழ்செல்வன் முன்னிலை வகித்து வருகிறார்.
மும்பை,
288 தொகுதிகளை கொண்ட மராட்டிய சட்டசபைக்கு ஒரே கட்டமாக கடந்த 20ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் ஆளும் பாஜக, சிவசேனா ( முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தரப்பு), தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார் தரப்பு) இணைந்து மகாயுதி கூட்டணியும், காங்கிரஸ், சிவசேனா (உத்தவ் தாக்கரே தரப்பு) தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார் தரப்பு) இணைந்து மகாவிகாஸ் அகாடி கூட்டணியும் களமிறங்கின.
இந்த தேர்தலில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் சியோன் கோலிவாடா தொகுதியில் பாஜக வேட்பாளராக கேப்டன் தமிழ்செல்வனும், காங்கிரஸ் வேட்பாளராக கணேஷ் குமார் யாதவும் போட்டியிட்டனர்.
வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், 11வது சுற்று முடிவுபடி கேப்டன் தமிழ்செல்வன் 50,060 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட கணேஷ் குமார் யாதவ் 36,244 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார். இருவருக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் 14,234 ஆகும். கேப்டன் தமிழ்செல்வன் ஏற்கனவே நடந்த தேர்தலில் இத்தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.