கும்ப மேளாவில் 30 பேர் உயிரிழந்த சோகம்: பக்தர்களுக்கு யோகி ஆதித்யநாத் விடுத்த வேண்டுகோள்


கும்ப மேளாவில் 30 பேர் உயிரிழந்த சோகம்: பக்தர்களுக்கு யோகி ஆதித்யநாத் விடுத்த வேண்டுகோள்
x

திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளாவில் எதிர்பாராமல் நடந்த கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் பலியானார்கள்.

பிரயாக்ராஜ்,

உத்தர பிரதேசத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவின் திரிவேணி சங்கமத்தில் அமாவாசையை ஒட்டி நேற்று புனித நீராட லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். இதனால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் உயிரிழந்தனர். அதில் 25 பேரது உடல் அடையாளம் காணப்பட்டுள்ளது என்று போலீஸ் டிஐ.ஜி. வைபவ் கிருஷ்ணா தெரிவித்தார்.

இதுபற்றி அவர் மேலும் கூறுகையில், இதில் காயமடைந்த 60 பேரில், 36 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்றவர்கள் சிறிய சிகிச்சைக்கு பின்னர் அவர்களது குடும்பத்தினருடன் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர் என்றார். பலியான 30 பேரில் 4 பேர் கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் வடகோன் பகுதியை சேர்ந்த ஜோதி ஹத்தார்வாட் ( 50), அவருடைய மகள் மேகா ஹத்தார்வாட் (16), மகாதேவி பகனூர் மற்றும் அருண் பகனூர் ஆகிய 4 பேரும் பலியாகி இருப்பது தெரிய வந்துள்ளது. இவர்களுடன் சென்ற மேலும் 9 பேரின் கதி என்ன என்பது தெரியவில்லை.

இந்நிலையில் லக்னோவில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய உத்தரபிரதேச மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், "பிரயாக்ராஜில் 9 கோடி பேர் குவிந்துள்ளனர். கங்கை நதிக்கரையில் அகாரா மார்க்கில் உள்ள தடுப்புகளை சில பக்தர்கள் தாண்டிச் சென்றபோது, இந்த துயரம் நடந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த 3 நீதிபதிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அகாரா பரிஷத் தலைவர்களிடம் பேசி, நெரிசல் குறைந்த பின்னர் நீராட அனுமதிக்கப்பட்டுள்ளது. பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதே எங்களது முதல் பணி.

நெரிசலை தவிர்க்க பக்தர்கள் அருகில் உள்ள கங்கை நதிக்கரையில் நீராட வேண்டும். கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா 25 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். முதல்-மந்திரி கட்டுப்பாட்டு அறை, தலைமைச் செயலர் கட்டுப்பாட்டு அறை, டி.ஜி.பி. கட்டுப்பாட்டு அறைகளில் இருந்து நாள் முழுவதும் கும்பமேளா நிகழ்வுகளை கண்காணித்து வருகிறோம். கும்பமேளாவில் கூட்ட நெரிசல் ஏற்பட்ட சூழலில், தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது" என்று அவர் கூறினார்.


Next Story