மகா கும்பமேளா கூட்ட நெரிசல்: நிலைமையை கேட்டறிந்தார் பிரதமர்

மகா கும்பமேளா கூட்ட நெரிசல் தொடர்பாக அம்மாநில முதல்-மந்திரியிடம் நிலைமையை பிரதமர் மோடி கேட்டறிந்துள்ளார்.
புதுடெல்லி,
உலகின் மிகப்பெரிய ஆன்மிக சங்கமமாக மகா கும்பமேளா திகழ்கிறது. உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. கடந்த 14ம் தேதி தொடங்கிய கும்பமேளா அடுத்த மாதம் 26ம் தேதி வரை 45 நாட்கள் நடைபெற உள்ளது. உலகம் முழுவதும் இருந்து கோடிக்கணக்கான மக்கள் பிரயாக்ராஜில் திரண்டு அங்குள்ள திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர்.
அமாவாசை தினமான இன்று மகா கும்பமேளாவில் உள்ள திரிவேணி சங்கமத்தில் புனித நீராட ஆயிரக்கணக்கானோர் திரண்டனர். அப்போது திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலால் பலருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தனர். இந்த சம்பவத்தில் 30 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அனைவரும் பெண்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் மற்றும் மீட்புக்குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவத்தில் உயிரிழப்பு எதுவும் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.
இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக உ.பி. முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்தை தொலைபேசியில் தொடர்புகொண்டு நிலைமையை பிரதமர் மோடி கேட்டறிந்துள்ளார். மேலும் பிரதமர் மோடி நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், யோகி ஆதித்யநாத்துடன் இதுவரை 2 முறை பேசியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.