பிரியங்கா காந்தியின் மென்மையான கன்னங்களை போன்று... பா.ஜ.க.வின் பிதூரி சர்ச்சை பேச்சு
பிரியங்கா காந்தியை பற்றி பா.ஜ.க.வின் பிதூரி சர்ச்சையாக பேசியதற்கு, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சுப்ரியா ஸ்ரீநாத் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
புதுடெல்லி,
70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டசபைக்கான தேர்தல் நடப்பு ஆண்டில் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இந்நிலையில், இந்த தேர்தலில் போட்டியிடும் 29 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியலை பா.ஜ.க. வெளியிட்டு உள்ளது. இதில், புதுடெல்லி தொகுதியில், ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் மற்றும் முன்னாள் முதல்-மந்திரியான கெஜ்ரிவாலுக்கு எதிராக முன்னாள் எம்.பி. பர்வேஷ் வர்மாவை அக்கட்சி நிறுத்தி உள்ளது.
இதேபோன்று கல்காஜி தொகுதியில், ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளர் மற்றும் முதல்-மந்திரி அதிஷிக்கு எதிராக முன்னாள் எம்.பி. ரமேஷ் பிதூரியை பா.ஜ.க. நிறுத்தி உள்ளது. இந்நிலையில், பிதூரி அரசியல் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசும்போது, பீகாரில் லாலு பிரசாத், ஹேமா மாலினியின் மென்மையான கன்னங்களை போன்று சாலைகளை அமைப்பேன் என கூறினார்.
அவர் பொய் கூறியுள்ளார். அதனை அவரால் செய்ய முடியவில்லை. ஆனால், நான் உங்களுக்கு உறுதி கூறுகிறேன். ஓக்ளா மற்றும் சங்கம் விகார் பகுதியில் நாங்கள் சாலைகளை மேம்படுத்தியது போன்று, கல்காஜியில் உள்ள அனைத்து சாலைகளையும் பிரியங்கா காந்தியின் மென்மையான கன்னங்களை போன்று அமைப்போம் என நாங்கள் உறுதியாக கூறுகிறோம் என்று சர்ச்சையாக பேசினார்.
அவருடைய இந்த பேச்சுக்கு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பெண் உறுப்பினரான சுப்ரியா ஸ்ரீநாத் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். அவர் கூறும்போது, இது வெட்கக்கேடானது என கூறியதுடன், பெண்களுக்கு எதிரான மனப்பான்மையை பா.ஜ.க. ஊக்குவிக்கிறது என்று கூறியுள்ளார்.
பிரியங்கா காந்தியை பற்றி அவர் கூறியது, பெண்களை பற்றிய அவருடைய மனநிலையை காட்டுகிறது. இதுவே பா.ஜ.க.வின் உண்மையான முகம் என்றும் கடுமையாக சாடியுள்ளார்.