சீதாராம் யெச்சூரியின் உடல் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் ஒப்படைப்பு


தினத்தந்தி 14 Sep 2024 5:52 AM GMT (Updated: 14 Sep 2024 12:16 PM GMT)

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி கடந்த 12 ஆம் தேதி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.

புதுடெல்லி,

சீதாராம் யெச்சூரி ஆகஸ்ட் 19-ம் தேதி நிமோனியா போன்ற மார்புத் தொற்று சிகிச்சைக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவர் அவசர சிகிச்சை பிரிவுக்கும், அதைத் தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். கடந்த சில நாட்களாக அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருந்து வந்தது.

அவரை பல்துறை நிபுணர்கள் அடங்கிய மருத்துவர்கள் குழு கண்காணித்து வந்தது. சுவாசக் கருவிகளின் உதவியுடன் அவர் சுவாசித்து வந்த நிலையில், நேற்று முன் தினம் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

சீதாராம் யெச்சூரியின் உடல் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தானமாக அளிக்கப்பட்டுள்ள நிலையில், தலைவர்கள், பொதுமக்கள் அஞ்சலிக்காக டெல்லியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில் உடல் வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து , தானமாக அளிக்கப்பட்ட சீதாராம் யெச்சூரியின் உடல் எய்ம்ஸ் மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டது.

Live Updates

  • 14 Sep 2024 11:42 AM GMT

    சீதாராம் யெச்சூரியின் உடல் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் ஒப்படைப்பு

    டெல்லியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த சீதாராம் யெச்சூரியின் உடலுக்கு தலைவர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

    இதையடுத்து எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்ட அவரது உடல் அங்கு கொண்டு செல்லப்பட்டது. முன்னதாக பொதுமக்கள் அஞ்சலிக்கு பிறகு சீதாராம் யெச்சூரியின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.

    ஆராய்ச்சி, பயிற்சி நோக்கங்களுக்காக தானமாக வழங்கப்பட்ட சீதாராம் யெச்சூரியின் உடல் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

  • 14 Sep 2024 11:22 AM GMT

    டெல்லியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த சீதாராம் யெச்சூரியின் உடலுக்கு தலைவர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்ட அவரது உடல் அங்கு கொண்டு செல்லப்பட்டது.

  • 14 Sep 2024 9:47 AM GMT


    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியின் உடலுக்கு சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், “நாட்டின் சித்தாந்தங்களுக்கு இடையே பாலம் கட்ட பாடுபட்ட நாட்டின் தலைசிறந்த தலைவர்களில் சீதாராம் யெச்சூரியும் ஒருவர். சீதாராம் யெச்சூரி தனது வாழ்நாள் முழுவதும் போராடி, தனது வாழ்நாள் முழுவதும் தனது சித்தாந்தத்தை பரப்புவதற்காக அர்ப்பணித்தவர். மக்களிடம் சீதாராம் யெச்சூரி என்றென்றும் நினைவுகூரப்படுவார், அரசியலில் பல ஏற்ற தாழ்வுகளைக் கண்ட அந்தத் தலைமுறைத் தலைவர்களின் தலைவர் அவர்தான்” என்று அவர் கூறினார். 

  • 14 Sep 2024 9:04 AM GMT

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியின் உடலுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திமுக எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன் அஞ்சலி செலுத்தினர்.

  • 14 Sep 2024 7:02 AM GMT


    ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும் டெல்லி முன்னாள் துணை முதல் மந்திரியுமான மனிஷ் சிசோடியா, சீதாராம் யெச்சூரி உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாட்டின் மிகப்பெரிய தலைவராக சீதாராம் யெச்சூரி விளங்கினார். ஊக்கமளிக்கும் சக்தியாக எங்கள் அனைவருக்கும் இருந்தவர். அவரது இடத்தை யாராலும் நிரப்ப முடியாது”என்றார்.

  • 14 Sep 2024 6:39 AM GMT

    சீதாராம் யெச்சூரி உடலுக்கு திமுக எம்.பி கனிமொழி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். கனிமொழி பின்னர் கூறியதாவது:- எனது கட்சியின் சார்பாக நான் அஞ்சலி செலுத்தியுள்ளேன். சீதாராம் யெச்சூரியின் மறைவு அவரது கட்சிக்கு மட்டும் இன்றி நாட்டிற்கே பேரிழப்பு ஆகும். சீதாராம் யெச்சூரி மிகச்சிறந்த சிந்தனையாளர், எழுத்தாளர், தத்துவவாதி. பலருக்கும் ஊக்கமளிப்பவராக விளங்கியவர். அனைத்து கட்சியினராலும் மதிக்கப்பட்ட ஒரு தலைவராக சீதாராம் யெச்சூரி இருந்தார். எனது தந்தை கருணாநிதிக்கும் கட்சியின் தலைவர் முக ஸ்டாலினுக்கும் மிகவும் நெருக்கமானவராக இருந்தார்” என்றார்.

  • 14 Sep 2024 6:01 AM GMT


    காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம், அஜய் மக்கான் உள்ளிட்டோரும் சீதாராம் யெச்சூரி உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

  • 14 Sep 2024 5:55 AM GMT

    டெல்லியில் மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள சீதாராம் யெச்சூரி உடலுக்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி, கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். 


Next Story