கும்பமேளா கூட்ட நெரிசல் சம்பவம் துயரமளிக்கிறது: மாயாவதி

மகா கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவம் துயரமளிப்பதாக மாயாவதி தெரிவித்துள்ளார்.
லக்னோ,
உத்தர பிரதேசத்தில் 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பமேளா நிகழ்ச்சி கடந்த 13-ந்தேதி தொடங்கியது. பிப்ரவரி 26-ந்தேதி வரை 45 நாட்கள் மகா கும்பமேளா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற உள்ளது. உலகம் முழுவதும் இருந்து கோடிக்கணக்கான மக்கள் பிரயாக்ராஜில் திரண்டு அங்குள்ள திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர்.
அமாவாசை தினமான இன்று மகா கும்பமேளாவில் உள்ள திரிவேணி சங்கமத்தில் புனித நீராட ஆயிரக்கணக்கானோர் திரண்டனர். அப்போது திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலால் பலருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தனர். 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் அனைவரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 15 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கும்பமேளா கூட்ட நெரிசல் சம்பவம் துயரமளிக்கிறது என பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மாயாவதி வெளியிட்ட எக்ஸ் பதிவில்,
பிரயாக்ராஜில் சங்கமத்தில் நடந்த மகா கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பக்தர்கள் உயிரிழந்த சம்பவம் மிகவும் கவலையளிக்கின்றது. இதுபோன்ற நேரத்தில், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் இந்த துக்கத்தைத் தாங்கும் வலிமையைப் பெற வேண்டும் என பதிவிட்டுள்ளார்.