புனித நீராடல் குறித்த கார்கேவின் கருத்து சனாதனத்திற்கு எதிரானது - பாஜக கண்டனம்


புனித நீராடல் குறித்த கார்கேவின் கருத்து சனாதனத்திற்கு எதிரானது - பாஜக கண்டனம்
x
தினத்தந்தி 27 Jan 2025 3:28 PM (Updated: 27 Jan 2025 3:32 PM)
t-max-icont-min-icon

கார்கேவின் கருத்துகளால் கோடிக்கணக்கான மக்கள் வேதனையடைந்துள்ளதாக பாஜக தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

உத்தரபிரதேசத்தில் நடைபெறும் மகா கும்ப மேளாவில் கோடிக்கணக்கானோர் புனித நீராடி வரும் நிலையில், அரசியல் தலைவர்களும் புனித நீராடி வருகின்றனர். அந்த வகையில், மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங், அமித்ஷா மற்றும் உத்தரபிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் ஆகியோர் புனித நீராடியுள்ளனர். இதற்கிடையே, பாஜக தலைவர்கள் மகா கும்ப மேளாவில் புனித நீராடுவதை விமர்சிக்கும் வகையில், கங்கையில் நீராடுவதன் மூலம் வறுமையை ஒழிக்க முடியுமா? என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கேள்வியெழுப்பினார்.

மேலும் பேசிய அவர், கேமராவில் நன்றாகத் தெரியும் வரை அவர்கள் (பாஜகவினர்) தொடர்ந்து நீராடிக்கொண்டே இருக்கிறார்கள் என்றும், மதத்தின் பெயரால் ஏழைகள் சுரண்டப்படுகிறார்கள் என்றும் கார்கே கருத்து தெரிவித்து இருந்தார்.

மல்லிகார்ஜுன கார்கேவின் இந்த கருத்துக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கார்கேவின் கருத்து தொடர்பாக பாஜக எம்.பி.யும் அதன் தேசிய செய்தித் தொடர்பாளருமான சம்பித் பத்ரா, செய்தியாளர்களிடம் கூறியதாவது;

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக சனாதன நம்பிக்கையின் அடையாளமாக இருந்து வரும் மகா கும்பமேளாவுக்கான மக்களின் மரியாதையை காங்கிரஸ் கேலி செய்கிறது. கங்கைத் தாய் பற்றிய கார்கேவின் கருத்துகளால் கோடிக்கணக்கான மக்கள் வேதனையடைந்துள்ளனர். சனாதனத்துக்கு எதிரான இத்தகைய கருத்துக்கள் வெட்கக்கேடானது.

இதுபோன்ற கருத்துக்களுக்காக நாட்டிடமும், சனாதனத்தை நம்பும் ஒவ்வொரு நபரிடமும் சோனியா காந்தியும் ராகுல் காந்தியும் மன்னிப்பு கேட்க வேண்டும். மற்ற மதங்களுக்கு எதிராக இதுபோன்ற கருத்துக்களை உங்களால் வெளியிட முடியுமா? இப்தார் விருந்தில் பங்கேற்பதன் மூலம் வறுமை ஒழிந்துவிடுமா என்று நீங்கள் கேட்க முடியுமா? காங்கிரஸ் கட்சியும் அதன் தலைவரும் எப்படி இதுபோன்ற சனாதன எதிர்ப்பு சிந்தனையை கொண்டிருக்க முடியும் என்பதற்கு விளக்கம் அளிக்க வேண்டும் "

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story