உல்லாசத்துக்கு அழைத்த பெண்... வீட்டிற்குள் 6 பேரா.. ? - வாலிபருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி

அஸ்மா, சந்தீப் குமாரை தொடர்புகொண்டு உல்லாசமாக இருக்க வரும்படி அழைத்துள்ளார்.
பெங்களூரு,
கேரள மாநிலம் காசர்கோட்டை சேர்ந்தவர் சந்தீப் குமார் (வயது 27). இவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு உடுப்பி மாவட்டம் குந்தாப்புராவுக்கு வந்தார். அப்போது அவருக்கு பைந்தூரை சேர்ந்த அப்துல் சவத் (28) என்பவருடன் அறிமுகம் ஏற்பட்டது. இந்த நிலையில் அப்துல் சவத், சந்தீப் குமாருக்கு குந்தாப்புராவை சேர்ந்த அஸ்மா (42) என்பவரை அறிமுகம் செய்து வைத்தார்.
இந்த நிலையில் கடந்த 2-ந்தேதி அஸ்மா, சந்தீப் குமாரை தொடர்புகொண்டு உல்லாசமாக இருக்க வரும்படி அழைத்துள்ளார். அவரது பேச்சில் மயங்கிய சந்தீப்குமாரும் குந்தாப்புராவுக்கு வந்துள்ளார். இதையடுத்து அஸ்மா, சந்தீப் குமாரை அங்குள்ள ஒரு வீட்டுக்கு சென்று உல்லாசமாக இருக்கலாம் என கூறி அழைத்து சென்றார்.
அங்கு சென்றதும் அஸ்மா தனது கூட்டாளிகளை வரவழைத்துள்ளார். இதையடுத்து அஸ்மா, அப்துல் சவத் உள்பட 6 பேர் சந்தீப்குமாரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.3 லட்சம் கேட்டுள்ளனர். அப்போது சந்தீப் குமார் அங்கிருந்து தப்பிக்க முயன்றுள்ளார். இதனால் அவர்கள் சந்தீப் குமாரை சரமாரியாக தாக்கியதுடன் கயிற்றால் அவரை கட்டி போட்டுள்ளனர்.
அப்போது அவரது சட்டை பையில் இருந்த ரூ.6,200-ஐ அவர்கள் பறித்து கொண்டனர். பின்னர் சந்தீப் குமாரின் செல்போனில் இருந்து ‘கூகுள் பே’ மூலம் 3 தவணைகளாக ரூ.35 ஆயிரம் வரை பரிமாற்றம் செய்து பறித்துள்ளனர். இதையடுத்து அவரது ஏ.டி.எம். கார்டை பறித்து ரகசிய எண்ணை பெற்றுக் கொண்டு ரூ.40 ஆயிரத்தையும் எடுத்துள்ளனர்.
இதையடுத்து இரவு 11 மணி அளவில் சந்தீப் குமாரை அவர்கள் விடுவித்தனர். மேலும் போலீசில் புகார் கொடுத்தால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி உள்ளனர். ஆனாலும் சந்தீப் குமார், இதுபற்றி உடுப்பி டவுன் போலீசில் புகார் அளித்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதுபற்றி போலீஸ் சூப்பிரண்டு ஹரிராம் சங்கா் கவனத்துக்கும் வந்தது.
இதையடுத்து அவரது உத்தரவின்பேரில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் நாயக், துணை போலீஸ் சூப்பிரண்டு குல்கர்னி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசாா் தீவிர விசாரணை நடத்தி 6 பேரை கைது செய்தனர்.
விசாரணையில், அவர்கள் அப்துல் சவத், அஸ்மா, சைபுல்லா (38), முகமது நசீர் (36), அப்துல் சத்தார் (23), அப்துல் அஜீஸ் (26) ஆகியோர் என்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து ரூ.18 லட்சம் மதிப்பிலான 2 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான 6 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.






