கேரளாவில் பெண் போலீஸ் வெட்டிக்கொலை

குடும்பத்தகராறில் பெண் போலீசை வீடு புகுந்து சரமாரியாக வெட்டிக்கொன்று தப்பி ஓடிய கணவனை போலீசார் கைது செய்தனர்.
திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்திற்கு உட்பட்ட சந்தேரா காவல் நிலையத்தில் சிவில் காவலராக பணிபுரிந்து வந்தவர் திவ்யஸ்ரீ (வயது 35). இவருக்கும் கணவர் ராஜேஷுக்கும் (வயது 40) இடையே கடந்த சில மாதங்களாக கருத்து வேறுபாடு இருந்து வந்தது. இந்தநிலையில் கரிவள்ளூரில் உள்ள பெற்றோர் வீட்டில் திவ்யஸ்ரீ 8 வயது மகனுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இந்தநிலையில் நேற்று நீதிமன்றத்தில் இவர்களது விவாகரத்து வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணை முடிந்த பிறகு திவ்யஸ்ரீ வீட்டுக்கு திரும்பினார். இந்தநிலையில் நேற்று மாலை சுமார் 6 மணியளவில் பைக்கில் மனைவியின் வீட்டுக்கு சென்றுள்ளார் ராஜேஷ், அவரது வீட்டிற்கு வந்த ராஜேஷ், திவ்யஸ்ரீயை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். அதை தடுக்க முயன்ற திவ்யஸ்ரீயின் தந்தை வாசுவையும் ராஜேஷ் வெட்டியுள்ளார்.
இந்த சம்பவத்தில் கழுத்திலும் மூக்கிலும் படுகாயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்த திவ்யஸ்ரீயை அக்கம் பக்கத்தினர் மீட்டு பையங்காடி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் திவ்யஸ்ரீ வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக கூறினர். படுகாயமடைந்த திவ்யஸ்ரீயின் தந்தை வாசு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து வளபட்டணம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். தப்பி ஓடிய ராஜேஷ் அங்குள்ள ஒரு பாரில் இருப்பது தெரியவந்தது. உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் அங்கு இருந்த ராஜேஷை சுற்றி வளைத்து கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். கேரளாவில் பெண் போலீசை கணவர் வெட்டிக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.