இந்தியாவில் முதல் மாநிலமாக வக்பு சட்டத்தை பயன்படுத்தும் கேரளா

வக்பு சட்டத் திருத்த மசோதா முஸ்லீம்களுக்கு எதிரானது அல்ல என்று மத்திய அரசு கூறி வருகிறது.
திருவனந்தபுரம்,
வக்பு வாரிய திருத்தச் சட்ட மசோதா நாடாளுமன்ற மக்களவை, மாநிலங்களவையில் அனல் பறக்கும் விவாததத்துக்கு பின்பு சமீபத்தில் நிறைவேறியது. இதைத்தொடர்ந்து அந்த மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்தார்.வக்பு திருத்த மசோதா 2025 இப்போது சட்டமாக மாறியுள்ளது. இந்தப் புதிய சட்டத்தை எதிர்த்து திமுக, காங்கிரஸ், ஏஐஎம்ஐஎம் மற்றும் ஆம் ஆத்மி கட்சி (ஏஏபி) தனித்தனி மனுக்கள் மூலம் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளன.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பல முஸ்லீம் அமைப்புகளும் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்தச் சட்டம் முஸ்லீம்களுக்கு எதிரானது அல்ல, வக்பு சொத்துக்களை பாகுபாடு காட்டுவதையும் தவறாகப் பயன்படுத்துவதையும் தடுப்பதே இதன் நோக்கம் என மத்திய அரசு தொடர்ந்து தெரிவித்து வருகிறது.
இந்தநிலையில், மத்திய அரசு கொண்டு வந்த வக்பு திருத்த சட்ட மசோதாவுக்கு, தமிழ்நாடு உட்பட பல மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அவற்றில் கேரளா ஒன்றாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், புதிய சட்டத்தின் கீழ் வக்பு வாரியத்தை ஏற்படுத்த, இன்னும் இரண்டு மாதங்களில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கேரள அரசு அறிவித்துள்ளது. கேரளாவைச் சேர்ந்த எதிர்க்கட்சியான காங்கிரஸ், இந்த சட்டத்திற்கு கடுமையாக எதிர்த்தது. கேரள சட்டசபையில் வக்பு திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
இந்தநிலையில், திடீர் திருப்பமாக, இந்தியாவிலேயே முதல் மாநிலமாக, புதிய சட்டத்தின் கீழ் வக்பு வாரியத்தை அமைக்க உள்ளதாக கேரள அரசு அறிவித்துள்ளது. வக்பு சட்டத் திருத்த மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், முதல் மாநிலமாக செயல்படுத்துகிறது கேரளா என்பது குறிப்பிடத்தக்கது.