கர்நாடகா காங்கிரஸ் எம்.எல்.ஏ. சிக்கிமில் கைது: ரூ. 12 கோடி பறிமுதல்

இந்திய மதிப்பில் ஒரு கோடி ரூபாய் வெளிநாட்டு பணம் உள்பட ரூ.12 கோடி ரொக்கம் கைப்பற்றப்பட்டுள்ளது.
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருந்து வருபவர் வீரேந்திர பப்பி (வயது 49).இவர், பல்வேறு தொழில்களை செய்து வருகிறார். இதுதவிர சட்ட விரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதாகவும், ஆன்லைன் சூதாட்ட செல்போன் செயலிகளில் பங்குதாரராக இருப்பதாகவும் அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தது. அதுபற்றி அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
அப்போது ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களை அவர் நடத்தி வருவதுடன், அதில் சட்டவிரோதமாக பணம் முதலீடு செய்திருப்பது பற்றிய ஆதாரங்கள் கிடைத்ததாகவும் தெரிகிறது. இதையடுத்து, பெங்களூரு சககாரநகர், வசந்த்நகர், சித்ரதுர்கா மாவட்டம் செல்லக்கெரேயில் உள்ள வீரேந்திர பப்பிக்கு சொந்தமான வீடு, அலுவலகங்களிலும், அவரது தம்பி வீட்டிலும் நேற்றுஅதிகாலையில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினார்கள்.
இதையடுத்து, சிக்கிம் மாநிலம் கேங்டோக்கில் இருந்த வீரேந்திர பப்பியை நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகள் பிடித்து விசாரணை நடத்தினார்கள். இந்த நிலையில், சட்டவிரோத பண பரிமாற்றம், ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களை நடத்தியதாக காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான வீரேந்திர பப்பியை கைது செய்திருப்பதாக அமலாக்கத்துறை அதிகாரிகள்அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
மேலும் அவருக்கு சொந்தமான 31 இடங்களில் நடந்த சோதனையின் போது சிக்கிய ஆவணங்கள், நகை, பணம் பற்றிய தகவல்களையும் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று வெளியிட்டுள்ளனர்.அதன்படி, இந்திய மதிப்பில் ஒரு கோடி ரூபாய் வெளிநாட்டு பணம் உள்பட ரூ.12 கோடி ரொக்கம், ரூ.6 கோடி தங்க நகைகள், 10 கிலோ வெள்ளி பொருட்கள், 4 சொகுசு கார்கள், முக்கியமான சொத்து ஆவணங்கள், 17 வங்கி கணக்குகள் மற்றும் 2 வங்கி கணக்குகளின் லாக்கர்கள் முடக்கப்பட்டு இருப்பதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.






