கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு
கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கை சிபிஐக்கு மாற்றியதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.
புதுடெல்லி,
கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கடந்த ஜூன் மாதம் விஷச்சாராயம் குடித்து 68 பேர் பலியானார்கள். நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்தநிலையில், வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என அதிமுக, தேமுதிக, பாஜக சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வு, கள்ளக்குறிச்சி விஷ சாராய மரணம் தொடர்பான வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றி கடந்த மாதம் (நவம்பர்) 20-ந்தேதி உத்தரவிட்டது.
இந்த நிலையில், சென்னை ஐகோர்ட்டின் இந்த உத்தரவை எதிர்த்தும், ஐகோர்ட்டு உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க கோரியும் சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு அரசின் சார்பில் வக்கீல் டி.குமணன் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். மேலும் விஷ சாராய வழக்கை சிபிஐ வசம் ஒப்படைத்தால் அதன் விசாரணை முடிய கால தாமதம் ஆகும் என்றும் தமிழ்நாடு காவல்துறையே விசாரணையை தொடர்ந்து நடத்த அனுமதிக்க வேண்டும் என்றும் மேல்முறையீட்டு மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதே விவகாரம் தொடர்பாக அதிமுக, பாமக, பாஜக சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.