ஜார்க்கண்ட்: 24 மணி நேரத்தில் 4 பேர் தற்கொலை - ஜாம்ஷெட்பூரில் பரபரப்பு


ஜார்க்கண்ட்: 24 மணி நேரத்தில் 4 பேர் தற்கொலை - ஜாம்ஷெட்பூரில் பரபரப்பு
x

அடுத்தடுத்து நிகழ்ந்த தற்கொலை சம்பவங்கள் ஜாம்ஷெட்பூர் நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஞ்சி,

பீகார் மாநிலம் சமஸ்திபூர் மாவட்டத்தை சேர்ந்த திவ்யான்ஷு பாண்டே(வயது 22) என்ற மாணவர், ஜார்க்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூர் நகரில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். 3-ம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், திவ்யான்ஷு பாண்டே நேற்று இரவு விஷம் குடித்துள்ளார்.

இதனை அறிந்த அவரது நண்பர்கள், உடனடியாக திவ்யான்ஷுவை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இரவு 1.30 மணியளவில் திவ்யான்ஷு பாண்டே உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், மாணவரின் தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதே சமயம், ஜாம்ஷெட்பூர் நகரில் கடந்த 24 மணி நேரத்தில் நிகழ்ந்த 4-வது தற்கொலை இதுவாகும். முன்னதாக கடந்த புதன்கிழமை இரவு தனியார் கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றி வந்த ரோகன் ஸ்ரீவஸ்தவா, தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அதே இரவில், லேத் மிஷின் ஆபரேட்டர் நாராயண் குமார் என்பவர் தற்கொலை செய்து கொண்டார். தொடர்ந்து நேற்று இரவு ஆட்டோ டிரைவர் ஜெய் சிங் என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அடுத்தடுத்து நிகழ்ந்த தற்கொலை சம்பவங்கள் ஜாம்ஷெட்பூர் நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 More update

Next Story