இந்தியாவின் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை; ஆதரவு தெரிவித்த உலக நாடுகள்

இந்தியாவின் நடவடிக்கைக்கு முழு ஆதரவு அளிப்பதாக பிரான்ஸ் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா மே 7-ந்தேதி(நேற்று) அதிரடி தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த தாக்குதலுக்கு 'ஆபரேஷன் சிந்தூர்' என பெயரிடப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் பாகிஸ்தானில் 4 இடங்கள் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 5 இடங்கள் என மொத்தம் 9 இடங்களில் பயங்கரவாதிகள் உள்ள அலுவலகங்கள், பயிற்சி முகாம்கள், அவர்களது வசிப்பிடங்கள் என 21 பயங்கரவாத நிலைகளை தரைமட்டமாக்கின.
இந்நிலையில், இந்தியாவின் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கைக்கு பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இது குறித்து இங்கிலாந்து முன்னாள் பிரதமர் ரிஷி சுனக் 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "மற்றொரு நாட்டில் இருந்து தங்கள் நாட்டின் எல்லைக்குள் பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்படுவதை எந்த ஒரு நாடும் ஏற்றுக்கொள்ள வேண்டியதில்லை. பயங்கரவாத உள்கட்டமைப்பை தாக்கிய இந்தியாவின் நடவடிக்கை நியாயமானது" என்று பதிவிட்டுள்ளார்.
இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் பேசிய அந்நாட்டு எம்.பி. பிரீத்தி பட்டேல், "தங்கள் நாட்டை பாதுகாக்கவும், தங்களுக்கு அச்சுற்றுத்தலாக இருக்கும் பயங்கரவாதத்தை அழிக்கவும் இந்தியாவுக்கு முழு உரிமை உள்ளது" என்று தெரிவித்தார்.
பிரான்ஸ் நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி ஜீன்-நோயல் பாரோட் கூறுகையில், "இந்தியாவில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் தற்காப்பு நடவடிக்கையை நாங்கள் புரிந்து கொள்கிறோம். இருப்பினும் நிலைமை தீவிரமடைவதை தவிர்க்கவும், பொதுமக்களை பாதுகாக்கவும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் முயற்சி செய்ய வேண்டும்" என்று தெரிவித்தார்.
முன்னதாக இந்தியாவில் உள்ள பிரான்ஸ் தூதரகம் வெளியிட்ட அறிக்கையில், பஹல்காம் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைக்கு முழு ஆதரவு அளிப்பதாக பிரான்ஸ் தெரிவித்திருந்தது.
அதே போல் இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் ரூவென் அசார் 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்ட பதிவில், "இந்தியாவின் தற்காப்பு நடவடிக்கைக்கு இஸ்ரேல் முழு ஆதரவு அளிக்கிறது. அப்பாவி மக்கள் மீது கொடூர தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளால் ஒருபோதும் தப்பிக்க முடியாது" என்று தெரிவித்தார்.
நெதர்லாந்து எம்.பி. கீர்ட் வைல்டர்ஸ் வெளியிட்டுள்ள 'எக்ஸ்' தள பதிவில், "நான் இந்தியாவை நேசிக்கிறேன். காஷ்மீர் 100 சதவீதம் இந்தியாவுக்கு சொந்தமானது" என்று பதிவிட்டுள்ளார். மேலும் 'பஹல்காம் தாக்குதலுக்கு பின்னால் பாகிஸ்தான்'(PakistanBehindPahalgam) என்ற ஹேஷ்டேக் ஒன்றையும் அவர் பதிவு செய்துள்ளார்.
அமெரிக்க எம்.பி. ஸ்ரீ தானேதர் அளித்த பேட்டியில், "பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவுக்கு தங்களை தற்காத்துக் கொள்ள முழு உரிமை உள்ளது. இந்துக்களை மட்டுமே கொல்ல வேண்டும் என்பதில் பயங்கரவாதிகள் உறுதியாக இருந்துள்ளனர். காட்டுமிராண்டித்தனமான தாக்குதளுக்கு பதிலடி கொடுக்க இந்தியாவுக்கு உரிமை உள்ளது. இந்த கடினமான சூழலில் இந்தியாவுடன் அமெரிக்கா துணை நிற்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்" என்றார். முன்னதாக இந்தியா-பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தம் செய்துவைக்க தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.






