'பிரபஞ்சத்தைப் பற்றிய புரிதலை இந்திய வேதங்கள் வழங்கியுள்ளன' - இஸ்ரோ முன்னாள் தலைவர் சோம்நாத்

பிரபஞ்சத்தைப் பற்றிய புரிதலை இந்திய வேதங்கள் வழங்கியதாக இஸ்ரோ முன்னாள் தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.
காந்திநகர்,
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள ஐ.ஐ.எம். கல்லூரியின் 60-வது பட்டமளிப்பு விழாவில் இஸ்ரோ முன்னாள் தலைவர் சோம்நாத் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த விழாவில் பேசியபோது அவர் கூறியதாவது;-
"இந்தியாவிடம் வளமான, புகழ்பெற்ற அறிவு மரபு இருந்து வந்துள்ளது. அது இப்போது வெளிச்சத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. வேதங்கள் முதல் நவீன அறிவியல் வரை, பிரபஞ்சத்தைப் பற்றிய புரிதலுக்கு இந்தியா எப்போதும் சிறந்த பங்களிப்பை வழங்கி வருகிறது.
வானியல், புவியியல், கணிதம், உலோகவியல் மற்றும் தத்துவம் ஆகியவற்றில் நுண்ணறிவை இந்தியா வழங்கியுள்ளது. உலகின் முதல் அறிவு ஆதாரமாக, உலகின் பிற நாடுகளை விட முன்னேறிய நிலையில் இந்தியா இருந்தது. பிரபஞ்சத்தைப் பற்றிய புரிதலை இந்திய வேதங்கள் வழங்கியுள்ளன.
பிரபஞ்சத்தின் தோற்றம் பற்றி 'மகாசலீலா' என்ற பண்டைய சமஸ்கிருத நூல் அறிவியல் ரீதியில் அழகாக எடுத்துரைக்கிறது. 'சூர்ய சித்தாந்தம்' என்ற நூல், கிரக இயக்கங்கள் மற்றும் சுற்றுப்பாதைகள் குறித்து விளக்குகிறது. சூரியன், சந்திரன் மற்றும் கோள்கள் அனைத்தும் அதில் அழகாக விவரிக்கப்பட்டுள்ளன. மேலும் அதில் உள்ள கணக்கீடுகள் இன்றைய தரநிலைகளுக்கு ஏற்ப துல்லியமாக உள்ளன.
மேலும், இந்திய தத்துவம் பொருள் முன்னேற்றத்தை வலியுறுத்தியது மட்டுமல்லாமல், ஆன்மீக முன்னேற்றத்திற்கும் முக்கியத்துவம் அளித்தது. இது முழுமையான மனித வளர்ச்சிக்கு அவசியமாகக் கருதப்பட்டது. இந்த சமநிலைதான் கடந்த காலத்தில் அறிவியல் மற்றும் ஆன்மீக முன்னேற்றங்களுக்கு இந்தியா அளித்த பங்களிப்பில் மிகவும் தனித்துவமாக உள்ளது."
இவ்வாறு அவர் தெரிவித்தார்.