அமெரிக்காவில் இந்திய மாணவர் சுட்டுக்கொலை - வெளியுறவுத்துறை மந்திரி இரங்கல்
அமெரிக்காவில் உள்ள வணிக வளாகத்தில் இந்திய மாணவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
சிகாகோ,
தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தை சேர்ந்தவர் நுகரபு சாய் தேஜா (26 வயது). இவர் முதுகலை பட்டப்படிப்பிற்காக கடந்த 4 மாதங்களுக்கு முன்பு அமெரிக்காவுக்கு சென்றார். அங்கு அவர் இல்லினாய் மாகாணத்தின் சிகாகோ நகரில் உள்ள கல்லூரியில் சேர்ந்து படித்து வந்தார். மேலும் அவர் அங்குள்ள வணிக வளாகத்தில் கடை ஒன்றில் பகுதி நேரமாக வேலையும் பார்த்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் தேஜா வழக்கம் போல் கடையில் வேலை பார்த்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் தேஜாவுடன் தகராறில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் தேஜாவை துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து உயிருக்கு போராடிய தேஜாவை கடையில் இருந்த சக ஊழியர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி தேஜா பரிதாபமாக இறந்தார். கொலைக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியாத நிலையில் இது குறித்து சிகாகோ போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக சிகாகோவில் உள்ள இந்திய துணைத் தூதரகம் வெளியிட்டுள்ள பதிவில், "இந்திய மாணவர் நுகரபு சாய் தேஜா கொலை செய்யப்பட்ட செய்தியை கேட்டு நாங்கள் அதிர்ச்சியும் ஆழ்ந்த வருத்தமும் அடைந்துள்ளோம். குற்றவாளிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரியுள்ளோம். பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு தூதரகம் அனைத்து உதவிகளையும் வழங்கும்" என்று தெரிவித்துள்ளது.
இந்திய துணைத் தூதரகத்தின் பதிவை பகிர்ந்துள்ள வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், "இந்த செய்தியால் ஆழ்ந்த வருத்தமடைந்தேன். நம்முடைய தூதரகம் குடும்பத்திற்கு அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது" என்று தெரிவித்துள்ளார்.