காலவரையற்ற உண்ணாவிரதம்...மயங்கி விழுந்த டெல்லி மந்திரி அதிஷி


காலவரையற்ற உண்ணாவிரதம்...மயங்கி விழுந்த டெல்லி மந்திரி அதிஷி
x
தினத்தந்தி 25 Jun 2024 6:16 AM GMT (Updated: 25 Jun 2024 10:56 AM GMT)

காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மந்திரி அதிஷி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

புதுடெல்லி:

தலைநகர் டெல்லியில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பல லட்சம் மக்களுக்கு தண்ணீர் கிடைக்காத நிலை உள்ளது. அரியானா மாநிலத்தில் இருந்து டெல்லிக்கு திறந்து விடப்படும் தண்ணீரை அரியானா அரசு முழுமையாக திறந்து விடாததன் காரணமாகவே இந்த தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக டெல்லி அரசு தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.

அத்துடன், டெல்லிக்கு வழங்க வேண்டிய தண்ணீரை திறக்க வலியுறுத்தி டெல்லி நீர்வளத்துறை மந்திரி அதிஷி கடந்த 21-ம் தேதி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார். டெல்லி மக்களுக்கு அரியானாவிடம் இருந்து கிடைக்க வேண்டிய நியாயமான தண்ணீர் கிடைக்கும் வரை உண்ணாவிரத போராட்டம் தொடரும் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், இன்று அதிகாலை அவருக்கு திடீரென ரத்த அழுத்தம் மற்றும் உடலில் சர்க்கரை அளவு குறைந்ததால், அவர் மயக்கம் அடைந்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். உண்ணாவிரதம் காரணமாக மந்திரி அதிஷிக்கு ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவு மிக மோசமாக குறைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "மந்திரி அதிஷியின் உடல்நிலை மோசமடைந்ததால் அவர் எல்.என்.ஜெ.பி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது ரத்த சர்க்கரை அளவு நள்ளிரவில் 43 ஆகவும், அதிகாலை 3 மணிக்கு 36 ஆகவும் குறைந்தது. அவர் கடந்த 5 நாட்களாக உணவு எதுவும் சாப்பிடாமல் டெல்லிக்கு வழங்க வேண்டிய தண்ணீரை விடுவிக்க கோரி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார். அவர் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறோம்." என்று அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story