சமையல் எண்ணெய் இறக்குமதி வரி உயர்வு: விவசாயிகள் பயனடைவா் - மத்திய வேளாண் மந்திரி


சமையல் எண்ணெய் இறக்குமதி வரி உயர்வு: விவசாயிகள் பயனடைவா் - மத்திய வேளாண் மந்திரி
x

கோப்புப்படம்

தினத்தந்தி 15 Sep 2024 2:57 AM GMT (Updated: 15 Sep 2024 3:01 AM GMT)

பிரதமா் நரேந்திர மோடி விவசாயிகள் நலன்கள் சாா்ந்த நடவடிக்கைகளை எடுத்து வருவதாக மத்திய வேளாண் மந்திரி தெரிவித்தார்.

புதுடெல்லி,

சமையல் எண்ணெய் இறக்குமதியை கட்டுப்படுத்தவும், விவசாயிகளின் வருவாயை அதிகரிக்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு 20 சதவீதம் அதிகரித்து உள்ளது.

குறிப்பாக கச்சா பாமாயில், சோயாபீன் எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றுக்கான இறக்குமதி 5.5 சதவீதத்தில் இருந்து 27.5 சதவீதமாக அதிகரிக்கப்பட்டு உள்ளது. இதைப்போல சுத்திகரிக்கப்பட்ட பாமாயில், சோயாபீன் எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய்க்கு இறக்குமதி வரி 13.75 சதவீதத்தில் இருந்து 33.75 சதவீதமாக அதிகரிக்கப்பட்டு உள்ளது. இந்த வரி உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன் மூலம் சமையல் எண்ணெய் விலை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த நடவடிக்கையின் மூலம், எண்ணெய் வித்துகள், பச்சை பயறு உள்ளிட்டவைகளில் விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்கும் என மத்திய வேளாண் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்தார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பிரதமா் நரேந்திர மோடி விவசாயிகள் நலன்கள் சாா்ந்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறாா். விவசாயிகளுக்கு முன்னுரிமை அளித்து அவா்களுக்கு உகந்தவராக இருந்து பல முக்கிய முடிவுகளை எடுத்துள்ளாா். சமையல் எண்ணெய்கள் மீதான இறக்குமதி வரி அறவே நீக்கப்பட்டிருந்தது. பூஜ்ஜிய சதவீதத்தில் இருந்த இறக்குமதி வரி 20 சதவீதமாக உயா்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒட்டு மொத்தமாக இவைகளுக்கு 27.5 சதவீதமாக வரி இருக்கும்.

இந்த நடவடிக்கையின் மூலம், இறக்குமதி குறைந்து உள்ளூா் விவசாயிகளின் அனைத்து எண்ணெய் வித்துகளுக்கும், குறிப்பாக சோயாபீன், பச்சை பயறு போன்றவைகளிலும் விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்க வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் ராபி பருவத்தில் எண்ணெய் வித்துக்கள் விதைப்பும் அதிகரிக்கும். அனைத்து விதமான எண்ணெய் வித்துக்களுக்கும் நல்ல விலை கிடைக்கும். கடுகு, சோயா போன்றவைகளின் விளைச்சலும் அதிகரிக்கும். ஏற்றுமதி செய்யப்படும் அளவில் வரை உற்பத்தி இருக்கும் என எதிா்பாா்க்கின்றோம். இந்த எண்ணெய் வித்துக்கள் தொடா்பான பிற துறைகளும் நன்மைகளைப் பெறும் என எதிா்பாா்க்கின்றோம். விவசாயிகளின் நலனுக்காக எடுக்கப்பட்ட முக்கியமான முடிவுக்காக பிரதமா் நரேந்திர மோடிக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்.

தனியாா் நிறுவனங்கள் மேற்கொள்ளும் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் மீதான அடிப்படை வரியை 32.5 சதவீதமாக உயா்த்தவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது. விவசாயிகளின் முன்னேற்றத்திற்கு மற்றொரு நடவடிக்கை வெங்காயத்தின் ஏற்றுமதி வரியை 40 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாக குறைக்கவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஏற்றுமதி வரி குறைப்பதன் மூலம், வெங்காயம் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்கும் வெங்காய ஏற்றுமதியும் அதிகரிக்கும்" என்று சிவராஜ் சிங் சவுகான் கூறினார்.


Next Story