'பாலஸ்தீன்' என பெயர் பொறிக்கப்பட்ட கைப்பையுடன் நாடாளுமன்றம் வந்த பிரியங்கா காந்தி
காசாவில் இஸ்ரேலின் நடவடிக்கைகளுக்கு எதிராகவும், பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாகவும் சமீப காலங்களாக பிரியங்கா காந்தி குரல் எழுப்பி வருகிறார்.
புதுடெல்லி,
காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது. இதையடுத்து ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் 117 பணய கைதிகளை உயிருடன் மீட்டுள்ளது.
அதேபோல், ஹமாஸ் ஆயுதக்குழுவினர்களால் கடத்தப்பட்டு கொல்லப்பட்ட பணய கைதிகளின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன. ஆனால், 101 இஸ்ரேலியர்கள் ஹமாஸ் வசம் பணய கைதிகளாக உள்ளனர் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இதில், பலர் உயிரிழந்திருக்கலாம் எனவும் தகவல் வெளியாகியிருந்தது. அதேவேளை, இந்த போரில் காசாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட 44 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதேபோல், மேற்குகரையில் ஏற்பட்ட மோதலில் 700க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இன்று பங்கேற்க வந்த வயநாடு தொகுதி எம்.பி. பிரியங்கா காந்தி பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவளிக்கும் வகையில், 'பாலஸ்தீனம்' என்று பெயர் பொறிக்கப்பட்ட கைப்பை ஒன்றை நாடாளுமன்றத்திற்கு எடுத்து வந்தார். அதுமட்டுமின்றி, அந்த பையில் தர்பூசணி உள்பட பாலஸ்தீனிய சின்னங்கள் பொறிக்கப்பட்டிருந்தன. பாலஸ்தீனுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக பிரியங்கா காந்தி இன்று எடுத்துவந்த கைப்பை அனைவரது கவனத்தையும் பெற்றுள்ளது.
காசாவில் இஸ்ரேலின் நடவடிக்கைகளுக்கு எதிராகவும், பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாகவும் சமீப காலங்களாக பிரியங்கா காந்தி குரல் எழுப்பி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் டெல்லியில் உள்ள பாலஸ்தீன தூதரகத்தின் பொறுப்பாளரான அபேத் எல்ராசெக் அபு ஜாசர், வயநாடு தொகுதியில் ஜெயித்த பிரியங்கா காந்தியை கடந்த வாரம் வாழ்த்தியிருந்தார்.
கடந்த ஜூன் மாதம் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை கடுமையாக விமர்சித்த பிரியங்கா காந்தி, இஸ்ரேல் அரசின் நடவடிக்கைகளை 'இனப்படுகொலை' எனவும், 'அரசின் காட்டுமிராண்டித்தனம்' எனவும் விமர்சித்திருந்தார்.