விண்வெளியில் 4 நாட்களில்... இஸ்ரோ சாதனை


விண்வெளியில் 4 நாட்களில்... இஸ்ரோ சாதனை
x

விண்வெளியில் 4 நாட்களில் காராமணி விதைகளை விளைய செய்து இஸ்ரோ சாதனை படைத்துள்ளது.

புதுடெல்லி,

விண்வெளியில் செடிகள் எவ்வாறு வளர்ச்சி அடைகின்றன என புரிந்து கொள்வதற்கான முக்கிய நடவடிக்கையை முன்னெடுத்து செல்வதற்காக இஸ்ரோ பரிசோதனை முயற்சியில் இறங்கியுள்ளது. இந்நிலையில், விண்வெளியில் குறைந்த புவியீர்ப்பு விசை கொண்ட பகுதியில் காராமணி விதைகளை 4 நாட்களில் விளைய செய்து இஸ்ரோ சாதனை படைத்துள்ளது.

திட்ட பரிசோதனையின்படி, மூடிய பெட்டி போன்ற சூழலில் 8 காராமணி விதைகள் கவனத்துடன் கட்டுப்படுத்தப்பட்டு, குறிப்பிட்ட வெப்ப நிலை பராமரிக்கப்பட்டு வந்தது. இதில், 4 நாட்களில் அவை முளைத்துள்ளன. இலைகள் விரைவில் முளைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது விண்வெளி ஆய்வில் ஒரு முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.

பி.எஸ்.எல்.வி.-சி60 போயம்-4 திட்டத்தின்போது, இந்த சாதனை படைக்கப்பட்டு உள்ளது. புவியீர்ப்பு விசை குறைவாக உள்ள சூழல்களில் விதைகளின் உற்பத்தி மற்றும் செடிகளின் வளர்ச்சி ஆகியவற்றை பற்றி அறிந்து கொள்வதற்கான நோக்கத்தில், விக்ரம் சாராபாய் விண்வெளி மையம், இந்த திட்டத்தினை மேற்கொண்டது.

இந்த திட்டத்தின் வெற்றியால், விண்வெளி வீரர்களுக்கு உணவை உற்பத்தி செய்வது உள்பட வருங்கால விண்வெளி திட்டங்கள் மற்றும் நீண்டகால விண்வெளி ஆய்வுகள் ஆகியவற்றுக்கு வழிகாட்டும் வகையிலான மதிப்புமிக்க கருத்துகள் கிடைக்கும்.

இந்த திட்டம் ஆனது, வருங்காலத்தில் விண்வெளி சுற்றுச்சூழல்களில் நீடித்த வேளாண் முறைகளை வளர்ச்சி பெற செய்வதற்கான நோக்கம் கொண்டது. நீண்டநேர பயணம் மற்றும் பிற கோள்களில் மனிதர்களை இருக்க செய்வது உள்ளிட்ட வருங்கால விண்வெளி திட்டங்களுக்கு உறுதியளிக்கும் வகையில் இந்த வெற்றி அமைந்துள்ளது.


Next Story