'டிஜிட்டல் கைது' மோசடி கும்பலிடம் ரூ.7 லட்சத்தை இழந்த ஐ.ஐ.டி. மாணவர்


டிஜிட்டல் கைது மோசடி கும்பலிடம் ரூ.7 லட்சத்தை இழந்த ஐ.ஐ.டி. மாணவர்
x
தினத்தந்தி 27 Nov 2024 2:53 PM IST (Updated: 4 Jan 2025 1:29 PM IST)
t-max-icont-min-icon

'டிஜிட்டல் கைது' மோசடி கும்பலிடம் ஐ.ஐ.டி. மாணவர் 7 லட்சத்து 29 ஆயிரம் ரூபாய் பணத்தை இழந்துள்ளார்.

மும்பை,

இணைய வழி மோசடி கும்பலைச் சேர்ந்தவர்கள் சமீப காலமாக 'டிஜிட்டல் கைது' எனப்படும் சைபர் மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் மோசடி செய்பவர்கள் அரசு அதிகாரிகள் அல்லது மத்திய புலனாய்வு அதிகாரிகள் போல் நடித்து ஆடியோ/வீடியோ அழைப்புகள் மூலம் பாதிக்கப்பட்டவர்களை மிரட்டுகின்றனர். இதனை நம்பி பயந்து போனவர்கள், மோசடி கும்பலிடம் பணத்தை இழக்கின்றனர்.

அந்த வகையில் மும்பை ஐ.ஐ.டி. கல்லூரியைச் சேர்ந்த 25 வயது மாணவர் ஒருவர், 'டிஜிட்டல் கைது' மோசடி கும்பலிடம் 7 லட்சத்து 29 ஆயிரம் ரூபாய் பணத்தை இழந்துள்ளார். கடந்த ஜூலை மாதம் அந்த மாணவரின் மொபைல் நம்பருக்கு ஒரு புதிய எண்ணில் இருந்து அழைப்பு வந்துள்ளது. அதை எடுத்து பேசியபோது, மறுமுனையில் பேசிய நபர் தன்னை 'இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்'(TRAI) அதிகாரி என்று அறிமுகம் செய்துள்ளார்.

மேலும், மாணவரின் மொபைல் எண்ணை பயன்படுத்தி 17 சட்ட விரோத சம்பவங்கள் நடந்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும், இந்த வழக்கு சைபர் கிரைம் காவல்துறைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். பின்னர் சிறிது நேரம் கழித்து வாட்ஸ் ஆப் வீடியோ கால் மூலம் போலீஸ் அதிகாரி போல் உடை அணிந்த நபர் ஒருவர் மாணவரை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். மாணவரின் ஆதார் நம்பரை கேட்டுப் பெற்ற அந்த நபர், மாணவர் மீது பணமோசடி வழக்கு உள்ளதாகவும், உடனடியாக ரூ.29,500 அனுப்ப வேண்டும் என்றும் வற்புறுத்தியுள்ளார்.

இதனிடையே, போலீஸ் அதிகாரி போல் உடையணிந்த அந்த நபர், மாணவரிடம் "உங்களை டிஜிட்டல் முறையில் கைது செய்துள்ளோம். நீங்கள் யாரையும் தொடர்பு கொண்டு பேசக் கூடாது" என்று கூறி மிரட்டியுள்ளார். தொடர்ந்து அடுத்த நாள் மீண்டும் அந்த மாணவருக்கு அழைப்பு வந்துள்ளது. இந்த முறை மோசடி கும்பலைச் சேர்ந்தவர்கள் மாணவரின் வங்கி கணக்கு விவரங்களை பெற்றுக்கொண்டுள்ளனர். இதன் பிறகு மாணவரின் கணக்கில் இருந்து 7 லட்சம் ரூபாயை எடுத்துள்ளனர். அதோடு, இனி உங்களுக்கு எந்த பிரச்சினையும் வராது என்றும் மாணவரிடம் அவர்கள் உறுதியளித்துள்ளனர்.

இந்த சம்பவம் நடந்த பிறகு, இது தொடர்பாக விசாரித்து பார்த்தபோதுதான் அந்த மாணவர் ஏமாற்றப்பட்டதை உணர்ந்துள்ளார். பின்னர் இது குறித்து போலீசில் அவர் புகார் அளித்துள்ளார். இது குறித்து மும்பை போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story