‘ராகுல் காந்தி பிரசாரம் செய்தால் நமக்கு வெற்றிதான்’ - யோகி ஆதித்யநாத் கிண்டல்

அயோத்தியைப் போல் பீகாரில் ராமர்-சீதா கோவில் கட்டப்படும் என யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
பாட்னா,
243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டசபைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 121 தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 6-ம் தேதியும், இரண்டாம் கட்டமாக 122 தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 11-ம் தேதியும் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அடுத்த மாதம் 14-ந்தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
பீகார் சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் 'மகாகத்பந்தன்' கூட்டணி ஆகிய 2 கூட்டணிகளுக்கிடையே கடும் போட்டி நிலவுகிறது. இதில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ஜ.க., ஐக்கிய ஜனதா தளம், ஜன்சக்தி கட்சி(ராம்விலாஸ்) உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதே போல் 'மகாகத்பந்தன்' கூட்டணியில் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சி(மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்), இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அரசியல் கட்சியினர் தற்போது தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், உத்தர பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத், போஜ்பூர் மற்றும் சிவான் பகுதிகளில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
“இன்று பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு உள்ளது. பீகார் நல்லாட்சியின் அடித்தளத்தில் முன்னேறி வருவதால், எதிர்காலத்திற்காக நாம் சிறப்பாக செயல்பட முடியும். ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரத்தில் இணைந்துள்ளார். அவர் பிரசாரம் செய்தால் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு நிச்சயம் வெற்றிதான்.
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முதல் மந்திரி நிதிஷ் குமார் தலைமையில், பீகாரில் சிறந்த உள்கட்டமைப்பு உள்ளது. 'லால் சலாம்' என்பதற்கு பதிலாக 'ஜெய் ஸ்ரீ ராம்' என்ற முழக்கங்கள் இனி எழுப்பப்படும் என்பது தெரிகிறது. அயோத்தியின் ராம ஜென்மபூமி கோவிலைப் போலவே, சீதாமர்ஹியில் ஒரு பிரமாண்டமான ராமர்-சீதா கோவில் கட்டப்படும்.
ராஷ்டிரிய ஜனதா தளம் இங்கே இருளை உருவாக்கியது. அவர்கள் ஏழைகளின் உரிமைகளை கொள்ளையடித்தனர். இன்று, பீகாரில் சிறந்த சாலை மற்றும் ரெயில் இணைப்பு உள்ளது. விமான இணைப்பு மேம்பட்டு வருகிறது. பாட்னாவில் மெட்ரோ கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. உள்நாட்டு நீர்வழி வசதி முன்னேறி வருகிறது. நான்கு வழி விரைவுச் சாலை கட்டப்பட்டு வருகிறது. பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்படுகின்றன. விவசாயிகளுக்கு, பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி உள்ளது.
உத்தர பிரதேசத்தில் மாபியா ஆட்சியையும், கலவரங்களையும் முடிவுக்குக் கொண்டுவருவதாக தேசிய ஜனநாயகக் கூட்டணி உறுதியளித்தது. கடந்த 8.5 ஆண்டுகளில், ஒரு கலவரம் கூட நடக்கவில்லை, யாராவது கலவரத்தைத் தூண்ட முயன்றால், அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டது மட்டுமல்லாமல், அவர்களின் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டு ஏழைகளுக்கு வீடுகள் கட்டப் பயன்படுத்தப்பட்டன.
வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதற்கு பீகாரின் வளர்ச்சி முக்கியமானது. அதற்கு நமக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு தேவை. முதல் மந்திரி நிதிஷ் குமார் தலைமையிலும், பிரதமர் மோடியின் வழிகாட்டுதலிலும், பீகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசை மீண்டும் நிறுவ வேண்டும்.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.






