'வேறு நாடாக இருந்தால் மோகன் பகவத் கைது செய்யப்பட்டிருப்பார்' - ராகுல் காந்தி ஆவேசம்
வேறு நாடாக இருந்தால் மோகன் பகவத் கைது செய்யப்பட்டிருப்பார் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
"இந்தியா 1947-ம் ஆண்டு விடுதலை பெறவில்லை என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார். அயோத்தியில் ராமர் கோவில் கட்டிய பிறகுதான் இந்தியாவிற்கு உண்மையான சுதந்திரம் கிடைத்தது என்றும், அரசியலமைப்பு சட்டம் சுதந்திரத்தின் அடையாளம் கிடையாது என்றும் அவர் பேசியுள்ளார்.
மோகன் பகவத்தின் பேச்சு ஒரு தேசதுரோகம். அரசியலைப்பு சட்டம் செல்லாது என்றும், ஆங்கிலேயர்களுக்கு எதிரான போராட்டம் செல்லாது என்றும் பொதுவெளியில் சொல்லக்கூடிய அளவுக்கு அவருக்கு துணிச்சல் உள்ளது.
இதுவே வேறு நாடாக இருந்தால், மோகன் பகவத் இந்நேரம் கைது செய்யப்பட்டிருப்பார். இந்தியா 1947-ம் ஆண்டு விடுதலை பெறவில்லை என்று கூறுவது ஒவ்வொரு இந்தியரையும் அவமதிப்பதைப் போன்றதாகும். இது போன்ற முட்டாள்தனமான பேச்சுகளை தடுத்து நிறுத்த வேண்டிய நேரம் இது."
இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்.