நான் பொம்பள இல்ல, ஆம்பள... 28 ஆண்டுகளாக இந்தியாவில் வசித்த வங்காளதேச நபர் கைது

மத்திய பிரதேசத்தின் புத்வாரா பகுதியில் 8 ஆண்டுகளாக நேகா என்ற பெயரில் திருநங்கை என கூறி வசித்து வந்திருக்கிறார்.
போபால்,
நாட்டில் முறையான ஆவணங்கள் இன்றி அண்டை நாடுகளை சேர்ந்தவர்கள் வசிக்கும் கலாசாரம் உலக அளவில் காணப்படுகிறது. அமெரிக்காவில் சட்டவிரோத வழியில் மெக்சிகோ, கனடா வழியாக ஊடுருவி பலர் வசித்து வருகின்றனர் என கூறி, அவர்களை வெளியேற்றும் நடவடிக்கையை டிரம்ப் அரசு எடுத்து வருகிறது.
இந்நிலையில், இந்தியாவிலும் இதுபோன்று சட்டவிரோத குடியேறிகள் பல மாநிலங்களில் உள்ளனர் என்ற குற்றச்சாட்டு கூறப்படுகிறது. அதனை மெய்ப்பிக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.
வங்காளதேச நாட்டை சேர்ந்த அப்துல் கலாம் என்பவர் 10 வயதில் மும்பைக்குள் நுழைந்துள்ளார். 20 ஆண்டுகளாக வசித்து வந்த அவர், பின்னர் மத்திய பிரதேசத்தின் போபால் நகருக்கு புலம்பெயர்ந்துள்ளார். புத்வாரா பகுதியில் 8 ஆண்டுகளாக நேகா என்ற பெயரில் திருநங்கை என கூறி வசித்து வந்திருக்கிறார்.
30 ஆண்டுகளாக, இந்தியாவில் போலியான ஆவணங்களை பயன்படுத்தி ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை வாங்கி வைத்துள்ளார். பாஸ்போர்ட் கூட அவரிடம் உள்ளது. இந்நிலையில், போபால் போலீசார் மேற்கொண்ட திடீர் சோதனையில், அவர் நேஹாவோ, திருநங்கையோ அல்ல என்பதும் அவர் அப்துல் என்பதும் விசாரணையில் தெரிய வந்தது.
மும்பையில் ஹிஜ்ரா சமூகத்தினரின் உதவியுடன் அதன் உறுப்பினராகிய அவர், திருநங்கை என அடையாளப்படுத்தி கொண்டார். போலியான பாஸ்போர்ட்டை கொண்டு, சந்தேகம் ஏற்படாமல் வங்காளதேசத்திற்கு போய், வந்து இருந்திருக்கிறார்.
இதனால், தேச பாதுகாப்புக்கு ஊறு விளைவிக்கும் வகையில் நடந்து கொண்ட அவரிடம், புலனாய்வு துறை, பயங்கரவாத ஒழிப்பு படை மற்றும் இணையதள பிரிவினர் விசாரணை மேற்கொள்ள உள்ளனர்.






