ரெயில் பயணிகளுக்கான போர்வைகள் எத்தனை முறை துவைக்கப்படுகின்றன? மத்திய மந்திரி பதில்
ரெயில் பயணிகளின் வசதி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய புதிய வகை துணிகள் மேம்படுத்தப்பட்ட தரத்துடன் கொள்முதல் செய்யப்படுகின்றன என மத்திய மந்திரி தெரிவித்து உள்ளார்.
புதுடெல்லி,
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் பலத்த எதிர்பார்ப்புடன் கடந்த 25-ந்தேதி துவங்கியது. அப்போது அதானி விவகாரம் மற்றும் மணிப்பூர் வன்முறை குறித்து விவாதிக்க கோரி, எதிர்க்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகிய இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.
நேற்று முன்தினம் இரு அவைகளுக்கும் விடுமுறை விடப்பட்டது. இதனால், அவை நடவடிக்கை எதுவும் நடைபெறவில்லை. இந்நிலையில், நாடாளுமன்ற மக்களவையில் காங்கிரஸ் எம்.பி. குல்தீப் இந்தோரா நேற்று கேள்வி ஒன்றை எழுப்பினார். இதன்படி, ரெயிலில் பயணம் செய்யும் பயணிகள், அவர்கள் படுக்கை விரிப்பு உள்ளிட்டவற்றுக்காக செலுத்தும் பணத்திற்கு ஏற்ப, கம்பளி போர்வைகள் அடிப்படை சுகாதார தரத்துடன் உள்ளனவா? அல்லது மாதத்திற்கு ஒரேயொரு முறை அவை துவைக்கப்படுகின்றனவா? என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு மத்திய ரெயில்வே துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் அளித்த பதிலில், இந்திய ரெயில்வே துறையில் பயன்படுத்தும் விரிப்புகள், அதிக கனம் இல்லாமல், எளிதில் துவைக்க கூடிய வகையில் உள்ளன. ஒட்டுமொத்தத்தில் வசதியான பயண அனுபவம் ஏற்படும் வகையில் பயணிகளுக்கு, நல்ல முறையிலான காப்பாக அவை இருக்கின்றன.
பயணிகளின் வசதி மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றை உறுதி செய்ய பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என கூறிய மத்திய மந்திரி, புதிய வகை துணிகள் மேம்படுத்தப்பட்ட தரத்துடன் கொள்முதல் செய்யப்படுகின்றன. அவற்றின் சிறந்த தரம் உறுதி செய்யப்படுகிறது.
சுகாதாரத்துடன் கூடிய விரிப்புகளை பயணிகளுக்கு விநியோகிக்க வேண்டும் என்பதற்காக, தரம் வாய்ந்த இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. விரிப்புகளை துவைப்பதற்காக குறிப்பிட்ட ரசாயன பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. துணிகளை துவைப்பது கண்காணிக்கப்படுகின்றன என கூறியுள்ளார்.
படுக்கை விரிப்புகள் பற்றிய புகார்களை விசாரிப்பதற்கென தனியாக கட்டுப்பாட்டு அறைகளும் மண்டல அளவில் அமைக்கப்பட்டு உள்ளன என்றும் கூறியுள்ளார். ரெயில் பயணிகளுக்கு வழங்கப்படும் விரிப்புகள் குறைந்தது மாதம் ஒரு முறை துவைக்கப்படுகின்றன. அந்த விரிப்புகளுடன் கூடுதலாக ஒரு படுக்கை விரிப்பு வழங்கப்படுகிறது என்று அவையில் அவர் கூறியுள்ளார்.