பெங்களூருவில் மிக கனமழை எச்சரிக்கை: பள்ளிகளுக்கு இன்று விடுமுறை


பெங்களூருவில் மிக கனமழை எச்சரிக்கை: பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
x

கோப்புப்படம்

பெங்களூருவில் இன்றும் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பெங்களூரு,

இந்த மாதத்தின் தொடக்கத்தில் தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இதன் தாக்கம் கர்நாடகத்திலும் எதிரொலித்து வருகிறது. கடந்த வாரம் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி அது ஆந்திராவில் கரையை கடந்தது. அதனால் பெங்களூருவில் 3 நாட்கள் கனமழை கொட்டியது. அவை கரையை கடந்த பிறகு 2 நாட்கள் வெயிலின் தாக்கம் இருந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை பெய்த கனமழை காரணமாக நகரில் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் தேங்கி பாதிப்புகளை ஏற்படுத்தியது. அன்றைய தினம் பள்ளிகளுக்கு அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவும் பெங்களூருவில் பெரும்பாலான இடங்களில் கனமழை கொட்டி தீர்த்தது.

தொடர் மழை காரணமாக பெங்களூருவில் பல சுரங்க பாதைகள், சாலைகள், தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் வடியாமல் தேங்கி கிடக்கிறது. இந்த நிலையில் நேற்றும் கனமழை கொட்டியதால் சுரங்கப் பாதைகள், சாலைகளில் மழைநீர் ஆறு போல் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் நகரில் பல்வேறு பிரதான சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் உண்டானது. இதனால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

இதற்கிடையே பெங்களூரு உள்பட 18 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதாவது வங்காள விரிகுடா கடலில் ஒரு காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகி இருக்கிறது. அது இன்று(புதன்கிழமை) வங்காள விரிகுடா கடலை மையமாக கொண்டு புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது.

24-ந் தேதி காலை முதல் வடமேற்காக அந்த புயல் நகர்ந்து 25-ந் தேதி காலையில் அது ஒடிசா மற்றும் மேற்கு வங்காளத்தில் கரையை கடக்கும் என்று கூறப்படுகிறது. அப்போது சுமார் 100 முதல் 120 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் என்றும், சுமார் 1½ கிலோ மீட்டர் சுற்றளவில் மையம் கொண்டு இந்த புயல் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.

இதன்மூலம் தமிழ்நாட்டில் வடக்கில் உள்ள மாவட்டங்களிலும், கர்நாடகத்தில் வடக்கு, தெற்கு கர்நாடக மாவட்டங்களில் இன்று முதல் வருகிற 28-ந்தேதி வரை 6 நாட்கள் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மிககனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் பெங்களூரு நகர மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார், அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு இன்று ஒரு நாள் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட கலெக்டர் ஜெகதீஷ் அறிவித்துள்ளார்.


Next Story