கனமழை பாதிப்பு: புதுச்சேரி பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு
புதுச்சேரியில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து தலைமை ஆசிரியர்களே முடிவு எடுக்கலாம் என்று அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.
புதுச்சேரி,
வங்கக்கடலில் உருவான பெஞ்சல் நேற்று முன்தினம் இரவு புதுச்சேரி-மரக்காணம் இடையே புதுச்சேரி அருகே கரையை கடந்தது. புயல் கரையை கடக்க தொடங்கியதில் இருந்து புதுச்சேரியில் மழை வெளுத்து வாங்கியது. புதுச்சேரி நகர பகுதி மட்டுமல்லாமல் பாகூர், வில்லியனூர், அரியாங்குப்பம், மணவெளி உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் விடிய, விடிய மழை கொட்டி தீர்த்தது.
இதனால் காணும் இடங்கள் எல்லாம் வெள்ளக்காடாக காட்சி அளித்தது. மழைநீர் சூழ்ந்த பகுதிகளுக்கு படகுகளில் சென்று, வீடுகளில் தத்தளித்த பெண்கள், குழந்தைகளை பத்திரமாக மீட்கப்பட்டனர். அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள் நிவாரண முகாம்களாக மாற்றப்பட்டு, பொதுமக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், கனமழை பாதிப்புகள் காரணமாக புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் நாளை (3.12.2024) முதல் (5.12.2024) வரை நடைபெற இருந்த இளநிலை மற்றும் முதுநிலை தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளின் தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும். மேலும் 06.12.2024 முதல் திட்டமிடப்பட்ட தேர்வுகளில் மாற்றமில்லை எனவும் முந்தைய அட்டவணையின்படி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் முகாம்களாக செயல்படும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து தலைமை ஆசிரியர்களே முடிவு எடுக்கலாம் என்று அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார். முகாம்களாக செயல்படாத பள்ளிகள் நாளை வழக்கம்போல் இயங்கு என்று அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.