அரியானா தேர்தலில் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் வெற்றி


அரியானா தேர்தலில் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் வெற்றி
x

File image

தினத்தந்தி 8 Oct 2024 1:44 PM IST (Updated: 8 Oct 2024 1:45 PM IST)
t-max-icont-min-icon

19 ஆண்டுகளுக்கு பின்பு ஜுலானா தொகுதியில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது.

சண்டிகார்,

அரியானாவில் கடந்த 5-ந்தேதி சட்டசபை தேர்தல் நடந்தது. மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கும் நடந்த இந்த ஒரே கட்ட தேர்தலில் 67.90 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்படுகின்றன. இதற்காக வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

அரியானாவில் 2 முறை ஆட்சியில் நீடித்து வரும் பா.ஜ.க. 3-வது முறையாக தொடர்ந்து ஆட்சியை பிடித்து ஹாட்ரிக் வெற்றியை பெறும் முனைப்பில் உள்ளது. எனினும், இந்த தேர்தலில் வெற்றியை பெற காங்கிரசும் பலத்த எதிர்பார்ப்புடன் உள்ளது.

இந்நிலையில், மல்யுத்த வீராங்கனையும், ஜுலானா தொகுதி காங்கிரஸ் வேட்பாளருமான வினேஷ் போகத் 65,080 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் யோகேஷ் குமார் 59,065 வாக்குகள் பெற்று 2ம் இடத்தை பெற்றுள்ளார். யோகேஷ் குமாரை 6,015 வாக்குகள் வித்தியாசத்தில் வினேஷ் போகத் வீழ்த்தியுள்ளார்.

19 ஆண்டுகளுக்கு பின்பு ஜுலானா தொகுதியில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளதை முன்னிட்டு காங்கிரஸ் உறுப்பினர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகளை பகிர்ந்தும் கொண்டாடி வருகின்றனர்.


Next Story