குடிபோதையில் ஆரத்தி தட்டை வீசிய மணமகன்... அடுத்து நடந்த விசயம் - வைரலான வீடியோ
கர்நாடகாவில் மணமகன் குடிபோதையில் திருமண மேடையில் கலாட்டாவில் ஈடுபட்டதும் மணமகளின் தாய் துணிச்சலான முடிவை எடுத்துள்ளார்.
பெங்களூரு,
கர்நாடகாவின் பெங்களூரு நகரில் பெண் ஒருவர் தன்னுடைய மகள் திருமணத்திற்காக எல்லா ஏற்பாடுகளையும் செய்துள்ளார். கூடியிருந்த விருந்தினர்களும் பேசி கொண்டு, மகிழ்ச்சியாக இருந்தனர். ஆனால் மணமகனோ, நண்பர்களுடன் குடித்து விட்டு போதையில் திருமண மேடைக்கு வந்து கலாட்டாவில் ஈடுபட்டு உள்ளார். விருந்தினர்களிடமும் தகாத வகையில் நடந்து கொண்டிருக்கிறார்.
இதனை பார்த்ததும் மணமகளின் தாய் அதிர்ச்சி அடைந்து கையெடுத்து கும்பிட்டு, இந்த திருமணமே வேண்டாம் என அதனை ரத்து செய்து விட்டார். அவரை திருமண நிகழ்ச்சிக்கு வந்த ஒருவர் அமைதிப்படுத்த முயன்றார். ஆனால், அதிக வேதனையில் இருந்த மணமகளின் தாய், திருமணத்திற்கு வந்திருந்தவர்களை நோக்கி கும்பிட்டு, அனைவரும் கிளம்பி செல்லுங்கள் என வேண்டுகோளாக கேட்டு கொண்டார்.
அந்த நபர் (மணமகன்) இப்பவே இப்படி நடந்து கொள்கிறார் என்றால், மகளின் வருங்காலம் என்னவாகும்? என அவர் கேட்பது வீடியோவில் பதிவாகி உள்ளது.
ஆரத்தி தட்டை மணமகன் குடிபோதையில் தூக்கி வீசியுள்ளார் என கூறப்படுகிறது. இதனை பார்த்ததும் மணமகள் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனை தொடர்ந்தே அவர்கள் இந்த திருமணம் வேண்டாம் என்ற முடிவுக்கு வந்துள்ளனர் என தகவல் தெரிவிக்கின்றது.
அந்த பெண்ணின் முடிவுக்கு சமூக ஊடகத்தில் பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். குடிகார நபரிடம் இருந்து மகளை காப்பாற்றி விட்டார் என்றும் விலைமதிப்பில்லா மனித வாழ்க்கையை பாதிப்பதற்கு பதிலாக, ஒரு சில மணிநேர மனஅழுத்தம் ஆனது சிறந்தது என்றும் விமர்சனங்களை பகிர்ந்து வருகின்றனர். துணிச்சலாக அவர் எடுத்த முடிவுக்கு ஆதரவாக, ஆயிரக்கணக்கானோர் இந்த வீடியோவுக்கு லைக்கும் தெரிவித்து வருகின்றனர்.