24 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - அரசு பள்ளி ஆசிரியர் கைது

ஆசிரியர் மீது ‘போக்சோ’ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சிம்லா,
இமாசல பிரதேச மாநிலம் சிர்மார் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகள் 24 பேர், அதே பள்ளியை சேர்ந்த ஆசிரியர் ஒருவர் தங்களுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக பள்ளியின் தலைமை ஆசிரியையிடம் புகார் தெரிவித்தனர்.
அந்த மாணவிகள் கூறிய புகார் தொடர்பாக பள்ளியின் பாலியல் தொல்லை தடுப்பு குழுவினர் விசாரணை நடத்தினர். இதனிடையே புகார் கூறிய மாணவிகளின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் அனைவரும் பள்ளிக்கு வரவழைக்கப்பட்டனர். ஆனால் பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர், தங்கள் குழந்தைகள் அனுபவித்து வந்த பாலியல் தொல்லை பற்றி எதுவும் தெரியாமல் இருந்து வந்துள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து மாணவிகளின் குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டு, இது குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன்படி சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது 'போக்சோ' உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






