ஏ.ஐ. மாடல்களை பயன்படுத்த அரசு ஊழியர்களுக்கு தடையில்லை - மாநிலங்களவையில் மத்திய மந்திரி தகவல்

கோப்புப்படம்
மத்திய அரசு ஊழியர்கள், செயற்கை நுண்ணறிவு மாடல்களை பயன்படுத்த எவ்வித தடையும் விதிக்கப்படவில்லை என்று மத்திய மந்திரி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
மக்களவையில், பேரிடர் மேலாண்மை திருத்த மசோதா-2024, ரெயில்வே திருத்த மசோதா-2024 ஆகியவை கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டன. பிறகு மாநிலங்களவைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அங்கும் நிறைவேற்றப்பட்ட பிறகு, மக்களவையில் நேற்று அந்த மசோதாக்களில், சுதந்திரம் பெற்ற 75-வது ஆண்டு என்பதற்கு பதிலாக, 76-வது ஆண்டு என்று திருத்தம் செய்யப்பட்டது. அந்த திருத்தங்களுடன் மக்களவையில் இரு மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டன.
இந்த நிலையில் மாநிலங்களவை கேள்வி நேரத்தில், பதில் அளித்த மத்திய பணியாளர் நலத்துறை இணை மந்திரி ஜிதேந்திர சிங், ''மத்திய அரசு ஊழியர்கள், செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) மாடல்களை பயன்படுத்த எவ்வித தடையும் விதிக்கப்படவில்லை. இருப்பினும், பொது தகவலின் ரகசியத்தன்மை, பாதுகாப்பு ஆகியவற்றை உறுதி செய்ய ஊழியர்கள் எச்சரிக்கையுடன் பயன்படுத்த வேண்டும்'' என்று கூறினார்.
மற்றொரு கேள்விக்கு பதில் அளித்த ஜிதேந்திர சிங், ''கிராமப்புற மக்களும் தங்களது குறைகளை தெரிவிக்க வசதியாக, ஆன்லைன் குறைதீர்ப்பு இணையதளத்தை நாடு முழுவதும் உள்ள பொது சேவை மையங்களுடன் இணைத்துள்ளோம். இதனால், 5 லட்சத்து 10 ஆயிரம் பொது சேவை மையங்கள் மூலமாக பொதுமக்கள் குறைகளை பதிவு செய்யலாம்'' என்று கூறினார்.