சிறுவனை கொன்று புதைத்த சிறுமி... தந்திரமாக செயல்பட்டு உண்மையை கண்டறிந்த போலீசார்

மத்திய பிரதேசத்தில் காணாமல் போன 4 வயது சிறுவனை 50 போலீசார் கொண்ட குழுவினர் பல்வேறு இடங்களில் தேடியும் கண்டறிய முடியவில்லை.
போபால்,
மத்திய பிரதேசத்தின் குவாலியர் நகரில் பெற்றோருடன் வசித்து வந்த 4 வயது சிறுவன் தேவ்ராஜ் வன்ஷ்கார். சில நாட்களுக்கு முன்பு, 12 வயது சிறுமியுடன் விளையாடி கொண்டிருந்த சிறுவன் அதன்பின்னர் காணாமல் போயிருக்கிறான்.
அவனுடைய பெற்றோர் பல இடங்களில் தேடியும் சிறுவனை கண்டறிய முடியவில்லை. போலீசில் புகார் அளிக்கப்பட்டது. சி.சி.டி.வி. காட்சி பதிவுகளின் அடிப்படையில், போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து, சிறுமியை அழைத்து விசாரித்தனர்.
அப்போது, ஒரு குறிப்பிட்ட இடத்தில் சிறுவனை விட்டு விட்டு சென்றேன் என்றாள். சிறுவனுக்கு சாப்பிட பெர்ரி பழங்களை கொடுத்து விட்டு சென்று விட்டேன் என்றும் நாய் அவனை தூக்கி சென்று விட்டது என்றும் கூறினாள். கடைசியில் பாபா ஒருவர் தன் மீது மந்திரம் ஏவி விட்டதில், சிறுவன் பலியாகி விட்டான் என சிறுமி கூறியிருக்கிறாள்.
இதனால், நிலைமை மோசமடைந்து இருக்கிறது என அறிந்த போலீசார், உண்மையை கண்டறிய நூதன முறையை கையாள முடிவு செய்தனர். அப்போது, பெண் போலீசார் ஒருவர் தனக்கு சாமி வந்திருக்கிறது என்றும், தன்னை சாமி என்றும் கூறியிருக்கிறார். அவர் போட்ட நாடகம் நன்றாக வேலை செய்தது.
இதனை கேட்டு சிறுமி அமைதியானார். இதன்பின்னர் அந்த சிறுமி பெண் போலீசிடம், சிறுவன் தேவ்ராஜ் இறந்து விட்டால் நீங்கள் என்ன செய்வீர்கள்? அவனை நீங்கள் காப்பாற்றி விடுவீர்களா? என கேட்டார். அதற்கு, நாங்கள் உனக்கு உதவுகிறோம். சிறைக்கெல்லாம் நீ போகமாட்டாய் என ஆறுதலாக கூறியிருக்கிறார்கள்.
இதன்பின்பே, சிறுவன் தேவராஜை கொலை செய்த விவரங்களை சிறுமி கூறியிருக்கிறார். சிறுவனை கொலை செய்து, குழிக்குள் புதைத்த விசயங்களையும் கூறி போலீசாரை அதிர வைத்திருக்கறார். அப்போதும் சந்தேகத்தில் போலீசார் 8 வயது சிறுவன் ஒருவனை சிறுமியின் மடியில் அமர வைத்துள்ளனர்.
இதன்பின்பு, சிறுவன் அந்த சிறுமியுடன் அரை மணிநேரம் நடந்து சென்றுள்ளான். சிறுமி காட்டிய வழியிலேயே போலீசாரும் பின்தொடர்ந்தனர். சிறுமி சரியாக தேவராஜின் உடலை அடையாளம் காட்டினார். சிறுமிக்கு சூனியம் வைத்திருக்கலாம் அல்லது சிறுமி தந்திர சடங்குகளின் பாதிப்புக்கு ஆளாகியிருக்கலாம் என போலீசார் சந்தேகம் தெரிவித்தனர்.
50 போலீசார் கொண்ட குழுவினர் பல்வேறு இடங்களில் தேடியும் சிறுவனை கண்டறிய முடியவில்லை. மோப்ப நாய் குழுவும் இதற்காக பயன்படுத்தப்பட்டது. ஆனால், சிறுமி கூறிய பின்னரே சிறுவனின் உடலை போலீசாரால் மீட்க முடிந்தது. எனினும், சிறுவனை கொலை செய்ததற்கான சரியான காரணம் என்ன என போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.