பட்டப்பகலில் சிறுமியை தீவைத்து கொளுத்திவிட்டு தப்பியோடிய இளைஞர்கள்; அதிர்ச்சி சம்பவம்


பட்டப்பகலில் சிறுமியை தீவைத்து கொளுத்திவிட்டு தப்பியோடிய இளைஞர்கள்; அதிர்ச்சி சம்பவம்
x

தோட்டப்பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது சிறுமியை 3 இளைஞர்கள் இடைமறித்தனர்.

புவனேஷ்வர்,

ஒடிசா மாநிலம் பூரி மாவட்டம் பயபர் கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமி இன்று காலை தனது தோழியின் வீட்டிற்கு சென்றுவிட்டு தனது வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்தார். கிராமத்திற்கு அருகே உள்ள தோட்டப்பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது சிறுமியை 3 இளைஞர்கள் இடைமறித்தனர்.

மேலும், தாங்கள் கொண்டுவந்த மண்ணெண்ணெயை சிறுமியின் மீது ஊற்றி தீ வைத்து கொளுத்தியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி, உடல் முழுவதும் தீப்பற்றியதில் அலறி துடித்துள்ளார்.

சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அங்கிருந்த கிராமத்தினர் விரைந்து வந்துள்ளனர். அதற்குள் சிறுமிக்கு தீ வைத்த 3 இளைஞர்களும் அங்கிருந்து தப்பியோடினர்.

இதையடுத்து, 70 சதவீத தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட சிறுமியை கிராமத்தினர் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். தீக்காயங்கள் தீவிரமாக இருந்ததையடுத்து மேல்சிகிச்சைக்காக சிறுமி புவனேஷ்வரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், சிறுமியை தீ வைத்து கொளுத்திவிட்டு தப்பியோடிய 3 இளைஞர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

1 More update

Next Story