கூட்டு பலாத்காரம்: கழிவறையில் ஆடையின்றி கிடந்த இளம்பெண்... தோழிகள் சேர்ந்து அரங்கேற்றிய கொடூரம்


கூட்டு பலாத்காரம்: கழிவறையில் ஆடையின்றி கிடந்த இளம்பெண்... தோழிகள் சேர்ந்து அரங்கேற்றிய கொடூரம்
x
தினத்தந்தி 8 May 2025 7:58 PM IST (Updated: 8 May 2025 8:13 PM IST)
t-max-icont-min-icon

4 நாட்கள் கழித்து வீட்டில் உள்ள கழிவறையில் நிர்வாண நிலையில் இளம்பெண் கண்விழித்தார்.

மும்பை,

மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள திட்வாலா பகுதியை சேர்ந்த 21 வயது இளம்பெண், தனது பாட்டியுடன் வசித்து வந்தார். அந்த பெண் அங்குள்ள ஒரு கட்டுமான நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், கடந்த 19-ந்தேதி இளம்பெண் தனது பாட்டியுடன் சண்டை போட்டுக்கொண்டு, அதே பகுதியில் உள்ள தனது தோழியின் வீட்டிற்கு சென்று தங்கியுள்ளார். இளம்பெண்ணின் மற்றொரு தோழியும் அங்கு இருந்துள்ளார்.

தோழியின் வீட்டில் சுமார் ஒரு வாரம் தங்கியிருந்த பிறகு, இளம்பெண் மீண்டும் தனது வீட்டிற்கு செல்வதாக கூறியுள்ளார். இதைக்கேட்ட அவரது தோழி, தனது நண்பர் ஒருவரை தொடர்பு கொண்டு, இளம்பெண்ணை அவரது வீட்டிற்கு அழைத்து செல்லுமாறு கூறியுள்ளார்.

அந்த நபர் காரை எடுத்துக் கொண்டு இளம்பெண்ணை அழைத்துச் செல்வதற்காக வந்துள்ளார். அந்த காரில் அவரது ஆண் நண்பர்கள் 4 பேர் இருந்துள்ளனர். அந்த காரில் இளம்பெண் ஏறிச்சென்றார். அவரது தோழிகள் 2 பேரும் அதே காரில் ஏறிச்சென்றனர்.

ஆனால் கார் தனது வீட்டிற்கு செல்லாமல் வேறு பாதையில் செல்வதை இளம்பெண் உணர்ந்தார். வேறு ஒரு வேலையை முடித்துவிட்டு பின்னர் வீட்டிற்கு செல்லலாம் என்று கூறி, இளம்பெண்ணை அவர்கள் 7 பேரும் சேர்ந்து ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அங்கு இளம்பெண்ணின் தோழிகள் அவரது உடலில் மயக்க மருந்தை செலுத்தியுள்ளனர். இதன் பிறகு 4 நாட்கள் கழித்து வீட்டில் உள்ள கழிவறையில் ஆடை இல்லாமல் நிர்வாண நிலையில் இளம்பெண் கண்விழித்தார். அதன்பிறகே தான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை இளம்பெண் உணர்ந்தார்.

இந்த சம்பவம் குறித்து யாரிடமும் கூறக்கூடாது என அவர்கள் மிரட்டியுள்ளனர். பின்னர் எப்படியோ அங்கிருந்து தப்பி வந்த இளம்பெண், தனக்கு நேரந்த கொடூரத்தை குடும்பத்தினரிடம் கூறினார். இதையடுத்து அவர்கள் இது குறித்து போலீசாரிடம் புகார் அளித்தனர்.

இது குறித்து விசாரணை நடத்திய போலீசார், இதில் சம்பந்தப்பட்ட 5 ஆண்கள் மற்றும் இளம்பெண்ணின் தோழிகள் 2 பேர் உள்பட மொத்தம் 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story