ஆதார் தகவல்களை இலவசமாக புதுப்பிக்க அவகாசம் நீட்டிப்பு: மக்களே மிஸ் பண்ணாதீங்க..!


Free Aadhaar update: UIDAI extends deadline
x
தினத்தந்தி 14 Jun 2024 2:09 PM IST (Updated: 14 Jun 2024 2:10 PM IST)
t-max-icont-min-icon

அரசின் பல்வேறு சேவைகளுக்கு ஆதார் கார்டு அவசியம். பல துறைகளில் ஆதார் கார்டுகளை இணைக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி:

பொதுமக்கள் தங்கள் ஆதார் விவரங்களை 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும் என இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) தெரிவித்தது.

கடந்த 8 முதல் 10 ஆண்டுகளுக்கு முன்னர் எடுக்கப்பட்ட ஆதார் அட்டையில் உள்ள பெயர், முகவரி, புகைப்படம் போன்ற விவரங்களை புதுப்பித்துக் கொள்ள வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, ஓட்டுனர் உரிமம், பான் கார்டு, வங்கி கணக்கு புத்தகம் ஆகிய ஆவணங்களுடன் அருகில் உள்ள நிரந்தர ஆதார் சேவை மையத்தை அணுகலாம் அல்லது மை ஆதார் என்ற இணையதளத்திலும் புதுப்பித்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி பொதுமக்கள் தங்கள் ஆதார் தகவல்களை புதுப்பிக்கத் தொடங்கினர்.

ஆன்லைன் மூலம் புதுப்பிக்க கட்டணம் எதுவும் கிடையாது. நேரில் ஆதார் சேவை மையத்திற்கு சென்று திருத்தம் செய்வதற்கு மட்டும் 50 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இந்த பணி மந்தமாக நடைபெற்றதால் தொடர்ந்து கால அவகாசம் நீட்டிக்கப்படுகிறது. ஆதார் தகவல்களை கட்டணமின்றி புதுப்பிக்க, முதலில் 2023 டிசம்பர் 23-ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில், அடுத்து 2024 மார்ச் 13, ஜூன் 14 என அடுத்தடுத்து இந்த அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இந்த அவகாசம் இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில், மேலும் மூன்று மாதங்களுக்கு அதாவது, செப்டம்பர் 14-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, இனி செப்டம்பர் 14-ம் தேதி வரை கட்டணம் இன்றி ஆதாரில் திருத்தங்களை செய்யலாம்.

இந்தியாவில் ஆதார் கார்டு என்பது முக்கியமான அடையாள அட்டையாக உள்ளது. அரசின் பல்வேறு சேவைகளுக்கு ஆதார் கார்டு அவசியம். பல துறைகளில் ஆதார் கார்டுகளை இணைக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனவே, ஆதார் தொடர்பான மோசடிகளைத் தடுக்க, 10 வருடங்களாக ஆதார் வைத்திருப்பவர்களை, சமீபத்திய தகவலுடன் விவரங்களை புதுப்பிக்குமாறு இந்திய தனித்துவ அடையாள ஆணையம் வலியுறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் ஏற்படுத்தி கொடுத்துள்ள வசதிகள் மூலம் எளிதாக ஆதார் விவரங்களை மாற்ற முடியும். https://myaadhaar.uidai.gov.in/ என்ற இணைதளத்தில் லாக் இன் செய்து ஆதார் விவரங்களை இலவசமாக புதுப்பிக்கலாம்.


Next Story