காரில் சென்றபோது முன்னாள் மந்திரி மீது மர்மநபர்கள் கல்வீச்சு: மருத்துவமனையில் அனுமதி
மர்மநபர்கள் கல்வீசி தாக்கியதில் மராட்டிய முன்னாள் மந்திரி அனில் தேஷ்முக் படுகாயம் அடைந்தார்.
நாக்பூர்,
மராட்டிய மாநிலத்தின் முன்னாள் உள்துறை மந்திரியும், சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ்(எஸ்.பி.) கட்சி மூத்த தலைவருமான அனில் தேஷ்முக் நேற்று நாக்பூர் மாவட்டம் நார்கேட் கிராமத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு விட்டு கடோலுக்கு காரில் திரும்பிக்கொண்டு இருந்தார்.
இரவு 8 மணி அளவில் கடோல் அருகே ஜலால்கேடா சாலையில் உள்ள பெல்பாட்டா அருகே வந்தபோது, அனில் தேஷ்முக்கின் காரின் மீது மர்ம நபர்கள் சிலர் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் அனில் தேஷ்முக்கின் தலைப்பகுதியில் கற்கள் தாக்கியதில் அவர் பலத்த காயம் அடைந்தார். இதனால் அவரது மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. உடனடியாக அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உயர் போலீஸ் அதிகாரிகள் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். தாக்குதலுக்கு காரணமானவர்களை அடையாளம் காண போலீசார் முயற்சித்து வருகின்றனர். சட்டசபை தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில் இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.