இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் இன்று அமெரிக்கா பயணம்

அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரிகளை விக்ரம் மிஸ்ரி சந்திக்கிறார்.
டெல்லி,
இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி. இவர் இன்று அமெரிக்கா செல்கிறார். 2 நாட்கள் பயணமாக அமெரிக்கா செல்லும் விக்ரம் மிஸ்ரி அமெரிக்க வெளியுறவுத்துறை உள்பட முக்கிய துறை உயர் அதிகாரிகளை சந்திக்கிறார்.
இந்த சந்திப்பின்போது பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, இந்தியாவின் நிலைப்பாடு உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்துகிறார். அதேபோல், இந்தியா , அமெரிக்கா இடையேயான வர்த்தகம், வரி விதிப்பு தொடர்பாக இரு நாடுகளுக்கு இடையே நிலவி வரும் முரண்பாடு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரதமர் மோடி கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்கா சென்ற நிலையில் தற்போது வெளியுறவுத்துறை செயலாளரின் அமெரிக்க பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு 29ம் தேதி விக்ரம் மிஸ்ரி இந்தியா திரும்புவார் என தகவல் வெளியாகியுள்ளது.






