கேரளாவை தொடர்ந்து கர்நாடகாவிலும் திடீர் நிலச்சரிவு
கேரளாவை தொடர்ந்து கர்நாடகாவின் தேசிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
பெங்களூரு,
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த சில வாரங்களாக அங்கு கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. அந்த வகையில், கேரளாவின் வயநாடு பகுதியில் நேற்று இரவு மிக கனமழை பெய்தது.
கேரளாவில் உள்ள வயநாட்டில் இன்று அதிகாலை பெரிய அளவிலான நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி 107 பேர் வரை பலியாகியுள்ளனர். 160-க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த நிலச்சரிவில் நூற்றுக்கணக்கானோர் சிக்கி தவித்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.
இந்த நிலையில், கர்நாடகத்தின் மங்களூரு-பெங்களூரு இடையேயான தேசிய நெடுஞ்சாலையில் ஷீரடி காட் சக்லேஷ்பூர் டோடா பகுதியில் திடீரென மிகபெரிய நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் நெடுஞ்சாலையில் சென்ற வாகனங்கள் மண்ணுக்குள் புதைந்தன. மண்ணுக்குள் சிக்கிய வாகனங்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதையடுத்து அந்த தேசிய நெடுஞ்சாலையில் அனைத்து போக்குவரத்தையும் கர்நாடக அரசு தடை செய்துள்ளது.