சபரிமலை; பம்பை உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு - பக்தர்கள் குளிக்க தடை


சபரிமலை; பம்பை உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு - பக்தர்கள் குளிக்க தடை
x
தினத்தந்தி 2 Dec 2024 8:31 AM IST (Updated: 2 Dec 2024 10:59 AM IST)
t-max-icont-min-icon

இனி வரும் நாட்களில் பக்தர்களின் கூட்டம் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

சபரிமலை,

பெஞ்சல் புயலின் தாக்கத்தால் கேரளாவில் வருகிற 4-ந் தேதி தேதி வரை கனமழை தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது. அதன்படி சபரிமலை, பம்பை, நிலக்கல், எருமேலி ஆகிய இடங்களில் நேற்று கனமழை பெய்தது.

சபரிமலையில் காலை முதல் மழை பெய்த நிலையில் மதியம் பனிமூட்டமும் இருந்தது. மதியம் மழை சற்று ஓய்ந்தாலும், பிற்பகலில் மீண்டும் வலுத்தது. காலையில் குறைவாக பக்தர்கள் வந்த நிலையில் பிற்பகலில் கூட்டம் அதிகமாக இருந்தது. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் 18-ம் படி ஏறி சாமி தரிசனம் செய்தனர். இரவு வரை மழை தொடர்ந்து பெய்ததால் பக்தர்கள் கடும் சிரமப்பட்டனர். பக்தர்களில் சிலர் முழு நீள பிளாஸ்டிக் அங்கிகளை அணிந்தபடி வந்து சாமி தரிசனம் செய்தனர்.

இனி வரும் நாட்களில் சபரிமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இன்றும் (திங்கட்கிழமை), நாளையும் (செவ்வாய்க்கிழமை) சபரிமலை, பம்பை, எருமேலி ஆகிய இடங்களில் இடி மின்னலுடன் கன மழை பெய்யும் என்றும், 40 கி.மீ. வேகத்தில் காற்று வீசலாம் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

இந்தநிலையில் பம்பை உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சபரிமலைக்கு வரும் அய்யப்ப பக்தர்கள் ஆறுகளில் இறங்கவும், குளிக்கவும் தடை விதித்து பத்தனம்திட்டா மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். சபரிமலை உள்ளிட்ட சுற்றுவட்டாரப்பகுதிகளில் தொடர் கனமழையால் பம்பை ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.


Next Story