காஷ்மீரில் இன்று முதல்கட்ட வாக்குப்பதிவு


காஷ்மீரில் இன்று முதல்கட்ட வாக்குப்பதிவு
x
தினத்தந்தி 17 Sept 2024 11:12 PM (Updated: 18 Sept 2024 1:22 AM)
t-max-icont-min-icon

காஷ்மீரில் 10 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் சட்டசபை தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று நடக்கிறது.

ஸ்ரீநகர்,

காஷ்மீரில் கடந்த 2014-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடந்த நிலையில், பல்வேறு திருப்பங்களுக்கு பிறகு, மக்கள் ஜனநாயக கட்சி-பா.ஜனதா இணைந்து அங்கு கூட்டணி ஆட்சி அமைத்தன. அதை தொடர்ந்து, 2018-ல் கூட்டணியில் இருந்து பா.ஜனதா விலகியது. இதனால் ஆட்சி கவிழ்ந்தது. அதன்பிறகு அங்கு கவர்னர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

இந்த சூழலில் கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. காஷ்மீர் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. காஷ்மீர் சட்டசபையுடன் யூனியன் பிரதேசமாகவும், லடாக் பகுதி சட்டசபை இல்லாத யூனியன் பிரதேசமாகவும் உருவாக்கப்பட்டன.

இதனிடையே காஷ்மீரில் 2024-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்துக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு கடந்த ஆண்டு இறுதியில் உத்தரவிட்டது. அதன்படி காஷ்மீரில் மொத்தமுள்ள 90 சட்டசபை தொகுதிகளுக்கு செப்டம்பர் 18-ந் தேதி தொடங்கி 3 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் கமிஷன் கடந்த மாதம் அறிவித்தது. அதன்படி, இன்று தேர்தல் நடைபெற உள்ளது.

ஆட்சியை கைப்பற்ற பா.ஜனதா, காங்கிரஸ் போன்ற தேசிய கட்சிகளும், தேசிய மாநாடு, மக்கள் ஜனநாயக கட்சி போன்ற மாநில கட்சிகளும் தீவிரமாக களத்தில் குதித்து உள்ளன. மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் முதல்கட்டமாக 24 தொகுதிகளுக்கு இன்று (புதன்கிழமை) வாக்குப்பதிவு நடக்கிறது. இதில் 16 தொகுதிகள் காஷ்மீர் பிராந்தியத்திலும், 8 தொகுதிகள் ஜம்முவிலும் உள்ளன. இந்த தொகுதிகளில் அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் மற்றும் சுயேச்சைகள் என 219 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களின் அரசியல் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் தகுதி வாய்ந்த வாக்காளர்களின் எண்ணிக்கை 23 லட்சத்து 27 ஆயிரத்து 580 ஆகும்.

தேர்தலை அமைதியாகவும், பாதுகாப்பாகவும் நடத்தி முடிக்க தேர்தல் கமிஷன் உறுதிபூண்டுள்ளது. அதற்கேற்ப வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில் ராணுவத்தினர், துணை ராணுவத்தினர் மற்றும் காஷ்மீர் போலீசார் நிறுத்தப்பட்டு பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


Next Story