மும்பை: பிரபல பாடகர் ஷான் வசித்து வந்த கட்டிடத்தில் தீ விபத்து
பிரபல பாடகர் ஷான் வசித்து வந்த கட்டிடத்தில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது.
மும்பை,
பிரபல பாடகர் ஷான். இவர் மும்பையின் பந்த்ராவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். இந்நிலையில், இன்று அதிகாலை அந்த கட்டிடத்தின் 7-வது மாடியில் தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது.
இது குறித்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்து, அங்கு சிக்கிக்கொண்டிருந்தவர்களை மீட்டனர். இதில் யாருக்கும் எந்த வித காயமும் ஏற்படவில்லை என தெரிகிறது.
இந்தசூழலில், பாதுகாப்பாக இருப்பதாக பாடகர் ஷான் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
'அன்பர்களே, எங்கள் கட்டிடத்தில் தீ பற்றிய செய்தி பரவி வருவதால், நாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோம் என்பதை உங்கள் அனைவருக்கும் தெரியப்படுத்திக் கொள்கிறேன். தீ 7-வது மாடியில் ஏற்பட்டது. நாங்கள் அதற்கு மேலே வசிக்கிறோம். தீயணைப்பு துறை, மும்பை காவல்துறையின் விரைவான நடவடிக்கைக்கு ஒரு பெரிய நன்றி. நாங்கள் அனைவரும் நலமாக இருக்கிறோம்' இவ்வாறு தெரிவித்துள்ளார்.