பா.ஜ.க.வின் அராஜகத்திற்கு எதிரான ஆம் ஆத்மியின் போராட்டம் தொடரும்: அதிஷி பேச்சு
![பா.ஜ.க.வின் அராஜகத்திற்கு எதிரான ஆம் ஆத்மியின் போராட்டம் தொடரும்: அதிஷி பேச்சு பா.ஜ.க.வின் அராஜகத்திற்கு எதிரான ஆம் ஆத்மியின் போராட்டம் தொடரும்: அதிஷி பேச்சு](https://media.dailythanthi.com/h-upload/2025/02/08/38305749-dcafa.webp)
பா.ஜ.க.வின் சர்வாதிகார போக்கு மற்றும் அராஜகத்திற்கு எதிரான ஆம் ஆத்மியின் போராட்டம் தொடரும் என டெல்லி முதல்-மந்திரி அதிஷி கூறியுள்ளார்.
புதுடெல்லி,
70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டசபைக்கான தேர்தல் கடந்த 5-ந்தேதி நடந்து முடிந்தது. இந்த தேர்தலில், ஆம் ஆத்மி, காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. என 3 முக்கிய கட்சிகள் மும்முனை போட்டியை ஏற்படுத்தி இருந்தன. ஆம் ஆத்மி வெற்றி பெற்றால் அது ஹாட்ரிக் வெற்றியாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
இதனை தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணியளவில் தொடங்கியது. தொடக்கம் முதலே, பா.ஜ.க. பல்வேறு இடங்களில் முன்னிலை பெற்றது. ஆம் ஆத்மி கட்சி பின்னடைவை சந்தித்தது. இந்நிலையில், டெல்லி சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையில் பிற்பகல் 6.30 மணியளவில் வெளியான தகவலின்படி, பா.ஜ.க. 47 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஓரிடத்தில் முன்னிலையில் உள்ளது. ஆம் ஆத்மி 22 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது.
டெல்லியில் ஆட்சியமைக்க, 36 இடங்களில் வெற்றி தேவை என்ற நிலையில், 40 தொகுதிகளுக்கு கூடுதலாக பா.ஜ.க. கைப்பற்றி உள்ளது. இதனால், அக்கட்சி ஏறக்குறைய 26 ஆண்டுகளுக்கு பின்னர் டெல்லியில் ஆட்சியமைக்க உள்ளது.
இந்நிலையில், டெல்லி முதல்-மந்திரி மற்றும் ஆம் ஆத்மியின் தலைவர்களில் ஒருவரான அதிஷி செய்தியாளர்களிடம் இன்று பேசும்போது, முதலில் டெல்லி மக்கள் மற்றும் உறுதியாக நின்ற நம்முடைய தொண்டர்களுக்கு நான் நன்றி தெரிவித்து கொள்கிறேன். மக்களின் முடிவை நாங்கள் ஏற்று கொள்கிறோம்.
எனினும், பா.ஜ.க.வின் சர்வாதிகார போக்கு மற்றும் அராஜகத்திற்கு எதிரான போராட்டம் தொடரும். இது ஒரு பின்னடைவு. ஆனால், டெல்லி மற்றும் நாட்டு மக்களுக்கான ஆம் ஆத்மியின் போராட்டம் தொடரும் என்று அவர் கூறியுள்ளார்.
கல்காஜி தொகுதியில் போட்டியிட்டு அதிஷி வெற்றி பெற்ற நிலையில், இதற்காக தன்னுடைய ஆதரவாளர்களுக்கு அவர் நன்றியை தெரிவித்து கொண்டார். அவர் கூறும்போது, என்னுடைய தொகுதியில் நான் வெற்றி பெற்றபோதும், இது கொண்டாட்டத்திற்கான நேரம் அல்ல. இது போராடுவதற்கான நேரம். எப்போதும் அநீதிக்கு எதிராக ஆம் ஆத்மி போராடி வந்துள்ளது என கூறிய அவர், அது இனியும் தொடரும் என்றும் கூறியுள்ளார்.