பெண் விமானி தற்கொலை வழக்கு: காதலனுக்கு கோர்ட்டு ஜாமீன்


பெண் விமானி தற்கொலை வழக்கு: காதலனுக்கு கோர்ட்டு ஜாமீன்
x

பெண் விமானி தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அவரது காதலனுக்கு கோர்ட்டு ஜாமீன் வழங்கியுள்ளது.

மும்பை,

உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண் சிரிஷ்டி துலி(25), ஏர் இந்தியா நிறுவனத்தில் விமானியாக பணியாற்றி வந்தார். இவர் மராட்டிய மாநிலம் மும்பையில் அந்தேரி பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். முன்னதாக டெல்லியில் விமானியாக பயிற்சி பெற்றபோது, ஆதித்யா பண்டிட்(27) என்ற நபருடன் சிரிஷ்டிக்கு பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் காதலாக மாறியுள்ளது.

இந்த நிலையில், கடந்த நவம்பர் 25-ந்தேதி பெண் விமானி சிரிஷ்டி, தனது அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். சிரிஷ்டியின் காதலர் ஆதித்யா பண்டிட், அவரை அடித்து துன்புறுத்தி வந்ததாகவும், சிரிஷ்டியை அசைவ உணவு சாப்பிடக் கூடாது என்று கட்டாயப்படுத்தியதாகவும் போலீசாரிடம் சிரிஷ்டியின் உறவினர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து, தற்கொலைக்கு தூண்டியதாக ஆதித்யா பண்டிட் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை மும்பை திண்டோஷி செசன்ஸ் கோர்ட்டில் நடந்து வருகிறது.

இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, தற்கொலை செய்வதற்கு முன் பெண் விமானி சிரிஷ்டி தனது காதலர் குறித்து குடும்பத்தினரிடமோ அல்லது போலீசாரிடமோ எந்த புகாரும் தெரிவிக்கவில்லை என்று குறிப்பிட்டு, கைது செய்யப்பட்ட ஆதித்யா பண்டிட்டிற்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.


Next Story