ஜார்க்கண்ட்: மனைவி வீட்டில் இல்லாத நேரத்தில் 3 குழந்தைகளுடன் கணவன் மரணம்

ஜார்க்கண்ட் மாநிலத்தில் மனைவி வீட்டில் இல்லாத சமயத்தில் 3 குழந்தைகளுடன் கணவன் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ராஞ்சி,
ஜார்க்கண்ட் மாநிலம், கிரிடி மாவட்டம், குக்ரா பகுதியில் இன்று (ஞாயிறு) காலையில் ஒரு ஆணும் அவரது 3 குழந்தைகளும் அவர்களுடைய வீட்டில் இறந்த நிலையில் கிடந்தனர். தகவல் அறிந்த போலீசார் அங்கு சென்று உடல்களை மீட்டனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், அந்த நபர் தனது 3 குழந்தைகளையும் கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு, பின்னர் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என தெரியவந்துள்ளது.
36 வயதாகும் அந்த நபர் கொத்தனார் வேலை செய்து வந்ததாகவும், அவரது மனைவி நேற்று (சனி) தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றிருந்ததாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். மேலும் சம்பவ இடத்திற்கு தடயவியல் நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன.
கொத்தனார் மற்றும் அவரது குழந்தைகளின் மரணத்தில் சந்தேகம் எழுந்துள்ளதால், பல்வேறு கோணங்களில் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாக மாவட்ட எஸ்.பி. பிமல்குமார் தெரிவித்தார்.