சிறை கைதியை விடுவிடுக்க ஜனாதிபதி பெயரில் வந்த போலி உத்தரவு - அதிகாரிகள் தீவிர விசாரணை
![சிறை கைதியை விடுவிடுக்க ஜனாதிபதி பெயரில் வந்த போலி உத்தரவு - அதிகாரிகள் தீவிர விசாரணை சிறை கைதியை விடுவிடுக்க ஜனாதிபதி பெயரில் வந்த போலி உத்தரவு - அதிகாரிகள் தீவிர விசாரணை](https://media.dailythanthi.com/h-upload/2025/02/09/38496789-national-02.webp)
சிறை கைதியை விடுவிடுக்க ஜனாதிபதி பெயரில் வந்த போலி உத்தரவு குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
லக்னோ,
உத்தர பிரதேச மாநிலம் சரண்பூர் மாவட்ட சிறைக்கு ஜனாதிபதியின் பெயரில் ஒரு உத்தரவு வந்துள்ளது. சிறையில் அடைக்கப்பட்டுள்ள விசாரணை கைதி அஜய் என்பவரை விடுதலை செய்யுமாறு அந்த உத்தரவில் கூறப்பட்டிருந்தது.
அது மட்டுமின்றி, ஜனாதிபதி நீதிமன்றத்தில் இருந்து உத்தரவு வந்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டிருந்து. இது குறித்து விசாரித்தபோது, 'ஜனாதிபதி நீதிமன்றம்' என்ற பெயரில் எதுவும் இல்லை என்பது தெரியவந்தது. போலியான உத்தரவை அனுப்பி சிறை கைதியை தப்பிக்க வைக்க மர்ம நபர்கள் முயற்சி செய்துள்ளனர் என்பதை அதிகாரிகள் கண்டறிந்தனர்.
அந்த போலி உத்தரவில் குறிப்பிடப்பட்டிருந்த அஜய் என்பவர், கொலை வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக சிறைத்துறை அதிகாரிகள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இது குறித்து ஜானக்புரி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், ஜனாதிபதியின் பெயரில் போலி உத்தரவை அனுப்பிய மர்ம நபர்கள் யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.