மதுபான கொள்கை ஊழல் வழக்கு: கவிதாவின் காவல் நீட்டிப்பு


BRS leader Kavitha
x
தினத்தந்தி 3 Jun 2024 8:46 AM GMT (Updated: 3 Jun 2024 10:25 AM GMT)

நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவடைந்த நிலையில் கவிதா இன்று டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.

புதுடெல்லி,

மதுபான லைசென்ஸ் பெற 100 கோடி ரூபாய் அளவில் ஆம் ஆத்மி கட்சிக்கு லஞ்சம் கொடுத்ததாக சவுத் குரூப்பின் முக்கிய குற்றவாளியாக சந்திரசேகர ராவின் மகள் கே.கவிதா மீது அமலாக்கத்துறை குற்றம்சாட்டியது. இந்த வழக்கு தொடர்பாக கடந்த மார்ச் மாதம் 15-ந்தேதி கவிதா கைது செய்யப்பட்டார். தற்போது நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த வழக்கில் கவிதாவிற்கு எதிரான குற்றப்பத்திரிகை கடந்த மாதம் 29ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட பின்னர் கோர்ட்டு பிடிவாரண்டுகளை பிறப்பித்தது. மேலும் குற்றவாளிகளான இளவரசன், தாமோதர் மற்றும் அரவிந்த் சிங் ஆகிய 3 பேருக்கும் கோர்ட்டு ஜாமீன் வழங்கியது. அமலாக்கத்துறை விசாரணையின்போது குற்றம் சாட்டப்பட்ட மூவர் கைது செய்யப்படாமல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதால் இவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

இதனிடையே, இந்த வழக்கு விசாரணை தொடர்பாக கவிதாவின் நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், இன்று ரோஸ் அவன்யூ கோர்ட்டில் நேரில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, சிறப்பு நீதிபதி காவேரி பவேஜா அவரது காவலை ஜூலை 3ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.

இந்த முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ தாக்கல் செய்த இரண்டு வழக்குகளில் கவிதா நீதிமன்ற காவலில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story