எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த குமாரசாமி, பசவராஜ் பொம்மை - காரணம் என்ன?


எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த குமாரசாமி, பசவராஜ் பொம்மை - காரணம் என்ன?
x
தினத்தந்தி 15 Jun 2024 10:30 AM GMT (Updated: 15 Jun 2024 12:27 PM GMT)

கர்நாடக முன்னாள் முதல்-மந்திரிகளான குமாரசாமி, பசவராஜ் பொம்மை எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தனர்.

பெங்களூரு,

கர்நாடக முன்னாள் முதல்-மந்திரிகள் எச்.டி. குமாரசாமி, பசவராஜ் பொம்மை. மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியை சேர்ந்த எச்.டி.குமாரசாமி சன்னப்பட்னா தொகுதி எம்.எல்.ஏ.வாகவும், பா.ஜ.க. மூத்த தலைவர் பசவராஜ் பொம்மை ஷிகான் தொகுதி எம்.எல்.ஏ.வாகும் செயல்பட்டு வந்தனர்.

இதனிடையே, நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் எச்.டி. குமாரசாமி மற்றும் பசவராஜ் பொம்மை போட்டியிட்டனர். தேசிய ஜனநாயக கூட்டணியில் மாண்டியா தொகுதியில் போட்டியிட்ட எச்.டி.குமாரசாமி அபார வெற்றிபெற்றார். அதேபோல், ஹவேரி தொகுதியில் போட்டியிட்ட பசவராஜ் பொம்மையும் வெற்றிபெற்றார். இதில், பிரதமர் மோடி தலைமையிலான மந்திரி சபையில் எச்.டி.குமாரசாமி இரும்பு மற்றும் கனரக தொழில்துறை மந்திரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், எச்.டி.குமாரசாமி மற்றும் பசவராஜ் பொம்மை இருவரும் தங்கள் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துள்ளனர். எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டதையடுத்து இருவரும் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தனர். இதையடுத்து, 2 சட்டசபை தொகுதிகளும் காலியாக உள்ளதால் இந்த தொகுதிகளுக்கு விரைவில் தேர்தல் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story