ராகுல் காந்தி பேசும் அனைத்தும் நாட்டை உடைக்கும் வகையில் உள்ளது - பாஜக தலைவர் ஜே.பி. நட்டா


ராகுல் காந்தி பேசும் அனைத்தும் நாட்டை உடைக்கும் வகையில் உள்ளது - பாஜக தலைவர் ஜே.பி. நட்டா
x

ராகுல் காந்தி பேசும் அனைத்தும் நாட்டை உடைக்கும் வகையில் உள்ளதாக பாஜக தலைவர் ஜே.பி. நட்டா குற்றஞ்சாட்டியுள்ளார்.

டெல்லி,

காங்கிரஸ் கட்சியின் புதிய தலைமை அலுவலகம் தலைநகர் டெல்லியில் இன்று திறக்கப்பட்டது. தலைமை அலுவலகத்தை காங்கிரஸ் பொதுச்செயலாளர் மல்லிகார்ஜுன கார்கே, மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல்காந்தி ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.

இதனிடையே புதிய தலைமை அலுவலக திறப்பு விழாவில் பேசிய ராகுல் காந்தி, நாட்டின் ஒவ்வொரு அமைப்பையும் பாஜக, ஆர்எஸ்எஸ் கைப்பற்றிவிட்டது. நாம் பாஜக, ஆர்எஸ்எஸ் மற்றும் இந்திய மாநிலங்களுடன் சண்டையிட்டு வருகிறோம்' என்றார்.

இந்நிலையில், ராகுல் காந்தியின் பேச்சுக்கு பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், இனி மறைக்க முடியாது. காங்கிரசின் மோசமான உண்மை அவரது தலைவரால் வெளியே வந்துவிட்டது. இந்திய மாநிலங்களுடன் சண்டையிடுகிறார் என நாட்டிற்கு தெரிந்த ஒன்றை தாமாக கூறியதற்கு ராகுல் காந்திக்கு நன்றி கூறிக்கொள்கிறேன்.

இந்தியாவை அமவதிக்க, இழிவுபடுத்த நினைக்கும் நகர்புற நக்சல்களுடன் ராகுல் காந்தியும் அவருக்கு நெருக்கமானவர்களும் நெருங்கிய தொடர்பில் உள்ளனர் என்பது ஒன்றும் ரகசியமல்ல. அவரது தொடர்ச்சியான செயல்கள் இந்த நம்பிக்கையை வலிமைபடுத்துகிறது. ராகுல் காந்தி செய்யும் செயல்களும், அவர் பேசும் அனைத்தும் நாட்டை உடைக்கும் வகையிலும், மக்களிடையே பிளவை ஏற்படுத்தும் வகையிலும் உள்ளது' என தெரிவித்துள்ளார்.


Next Story