காஷ்மீரில் என்கவுன்டர்; 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
டெல்லியில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தலைமையில் பாதுகாப்பு தொடர்பாக உயர்மட்ட கூட்டம் ஒன்று இன்று நடைபெறும் என தகவல் தெரிவிக்கின்றது.
குல்காம்,
ஜம்மு மற்றும் காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் கத்தர் பகுதியில் நேற்றிரவு பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளனர் என கிடைத்த ரகசிய தகவலை தொடர்ந்து, அந்த பகுதியை படையினர் தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்திய ராணுவமும், ஜம்மு மற்றும் காஷ்மீர் போலீசாரும் இணைந்து கூட்டாக தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அப்போது, மறைந்திருந்த பயங்கரவாதிகள், படையினரை நோக்கி தாக்குதல் நடத்தினர். இதனை தொடர்ந்து வீரர்களும் பதிலடியாக துப்பாக்கி சூடு நடத்தினர்.
இந்த மோதலில், பயங்கரவாதிகள் 5 பேர் சுட்டு கொல்லப்பட்டனர். கடந்த 3-ந்தேதி ஸ்ரீநகர் மாவட்டத்தில் ஜுனைத் அகமது பட் என்ற பயங்கரவாதியை படையினர் சுட்டு கொன்றனர். ககன்கீர், கந்தர்பால் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்களை இலக்காக கொண்டு அவர் நடத்திய தாக்குதலில் பலர் உயிரிழந்தனர்.
இதனை தொடர்ந்து, பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையை அதிகரித்து உள்ளனர். இந்த நிலையில், டெல்லியில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தலைமையில் பாதுகாப்பு தொடர்பாக உயர்மட்ட கூட்டம் ஒன்று இன்று நடைபெறும் என தகவல் தெரிவிக்கின்றது.